கலிபோர்ணியா மாநிலத்தில் 2035 க்குப் பின்னர் விற்கப்படும் வாகனங்கள் நச்சு வாயுக்களை வெளியிடலாகாது.
அமெரிக்காவின் மிக அதிக மக்கள் தொகையுள்ள மாநிலமான கலிபோர்ணியா சூழல் பேணும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றை அறிவித்திருக்கிறது. 2035 க்குப் பின்னர் அங்கே விற்கப்படும் புதிய வாகனங்கள் சூழலை மாசுபடுத்தாதவையாக இருக்கவேண்டும் என்று மாநிலத்தின் காற்றைப் பேணும் அதிகாரம் குறிப்பிட்டிருக்கிறது. 2035 இன் பின்னர் தொடர்ந்தும் பாவித்த வாகனங்கள் படிம எரிபொருட்களால் இயக்கப்படுபவை என்றாலும் விற்கப்பட அனுமதியுண்டு.
கலிபோர்ணியா மாநிலம் 40 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. ஏற்கனவே பல வருடங்களாக சுற்றுப்புற சூழலைப் பேணும் சட்டங்களைக் கடுமையாக்குவதில் முன்னணியில் நிற்கும் மாநிலமான கலிபோர்ணியாவில் பத்து வருடங்களுக்கு முன்னர் மின்சாரக் கலத்தால் இயங்கும் வாகனங்கள் 2 % மட்டுமே. தற்போது 16 விகித வாகனங்கள் மின்சாரத்தால் இயங்க அந்த மாநிலமே அமெரிக்காவில் மின்சாரக்கல வாகனங்களைக் கொண்டவர்களில் முதலாவதாகத் திகழ்கிறது.
2035 இல் புதிய வாகனங்கள் நச்சுக்காற்றெதையும் வெளியிடதாகாதென்ற முடிவு கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான உதவித்திட்டத்தை அடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் பாவிக்கப்படும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களில் 43 விகிதமானவை கலிபோர்ணியாவிலேயே இருக்கின்றன.
புதிய வாகனங்கள் நச்சுக்காற்றை வெளியிடலாகாது என்ற கட்டுப்பாடு செயற்பட ஆரம்பித்த இரண்டே வருடங்களில் அந்த மாநிலத்தின் தனியார்களின் வாகனங்களால் வெளியேறும் நச்சுவாயுக்களின் அளவை நாலிலொரு பகுதியால் குறைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. 2020 இல் கலிபோர்ணியாவின் ஆளுனர் கெவின் நியூசம் இப்படியான ஒரு நடவடிக்கையைப் பாவனைக்குக் கொண்டுவர முடியுமா என்று ஆராயும்படி கேட்டுக்கொண்டதை அடுத்தே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை அமெரிக்காவின் சூழல் பேணும் அதிகாரமும், ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்வது அடுத்த படியாகும்.
மேற்கண்ட முடிவானது அந்த மாநிலத்தில் வாழ்பவர்களில் நச்சுக்காற்றால் சுகவீனமடைந்து இறப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் என்ற எண்ணிக்கையைக் குறைக்கும் என்று ஆளுனர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்