குற்றங்கள் அதிகுறைந்த ஐஸ்லாந்தில் தீவிரவாதத் திட்டம் முறியடிக்கப்பட்ட பின் துப்பாக்கிச் சட்டங்கள் பற்றிய விவாதங்கள்.
செப்டெம்பர் மூன்றாம் வாரத்தில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாக நான்கு ஐஸ்லாந்துக் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்தச் செய்தி உலகில் குற்றங்கள் மிகக் குறைவான நாடுகளில் முதன்மையான ஒன்றான ஐஸ்லாந்தின் மக்களை அதிரவைத்திருக்கிறது. அந்தத் தீவிரவாதிகளிடமிருந்து டசினுக்கும் அதிகமான துப்பாக்கிகளையும், அதற்கான ஆயிரக்கணக்கான சுற்றுக் குண்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். அதைத்தவிர, சமீபத்தில் நாட்டில் மேலும் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
பாதுகாப்பான சமூகம் என்றும் பிரசித்தமான ஐஸ்லாந்தில் கடந்த தசாப்தத்தில் 52 துப்பாக்கிச்சூடுகள் மட்டுமே நடந்திருக்கின்றன. அவைகளில் 50 தற்கொலைகள் ஆகும். துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையோ ஐஸ்லாந்தில் மிக அதிகம். மூன்று பேருக்கு ஒரு துப்பாக்கி என்ற அளவில் நாட்டில் 106.000 துப்பாக்கிகள் சட்டபூர்வமாகப் பதியப்பட்டிருக்கின்றன. வேட்டையாடுதல், துப்பாக்கிகளைச் சேர்த்தல் போன்றவைக்காகவே அவர்களில் பலர் அந்த ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
நடந்த தீவிரவாதத் தாக்குதல் திட்டக் கைதுகளின் பின்னர் ஏற்கனவே கடுமையானதாக இருக்கும் ஆயுதங்கள் வைத்திருத்தல், பாவித்தல் சட்டங்களை மேலும் இறுக்கமாக்க வேண்டுமா என்ற வாக்குவாதம் நாட்டில் பரவலாக எழுந்திருக்கிறது. 20 வயதானவர்கள், எக்குற்றங்களும் செய்திருக்காதவர்கள், நல்ல ஆரோக்கியம், உளவியல் சுகம் உள்ளவர்கள் மருத்துவ சோதனை செய்துகொண்ட பின்னரே அவர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கொடுக்கப்படும். அதைத் தவிர அவர்கள் அவற்றை உரிமையாக வைத்திருப்பது பற்றிய வகுப்புக்களிலும் பங்குபற்றிச் சித்தியடைய வேண்டும்.
நாட்டில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் சட்டங்களை முழுமையாக மீளாய்வு செய்து மாற்றவேண்டும் என்ற அரசியல்வாதிகள் சிந்தித்து வருகிறார்கள். துப்பாக்கி உரிமையாளர்களிடையே அதை ஆதரிப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்