சுவீடனின் புதிய அரசும், அகதி விண்ணப்பதாரர்களை நாட்டுக்கு வெளியே தங்கவைக்கலாமா என்று சிந்திக்கிறது.
செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் சுவீடனில் நடந்த பொதுத்தேர்தலில் வலதுசாரிகளும், பழமைவாதிகளும் சேர்ந்து மக்களிடையே அதிக வாக்குகளை அறுவடை செய்திருந்தனர். ஆளும் கட்சியாக இருந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியுடன் சேர்ந்த இடதுசாரிகள் இரண்டே பாராளுமன்ற இடங்களைக் குறைவாகப் பெற்றிருந்தார்கள். அதையடுத்து நாலு கட்சிகளைக் கொண்ட பழமைவாத வலதுசாரிக் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்திப் புதிய அரசாங்கத்தை அறிவித்தனர். ஒக்டோபர் 17 ம் திகதி திங்களன்று பாராளுமன்றத்தின் நடந்த வாக்கெடுப்பில் அந்த அரசு 3 மேலதிக வாக்குகளால் வரும் 4 வருடங்களுக்குச் சுவீடனை ஆள ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்களின் முக்கிய திட்டங்களிலொன்று நாட்டுக்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை முடிந்தளவு குறைப்பதாகும்.
முதல் தடவையாக நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாகியிருக்கும் பழமைவாத வலதுசாரிக் கட்சியானது புதிய அரசாங்கத்தின் திட்டங்களை வடிவமைப்பதில் பெரியளவில் தனது பலத்தைப் பாவித்திருக்கிறது. அவர்களின் இனவாதம் பற்றிய பின்னணி சுவீடனின் மட்டுமன்றி சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும்பெருமளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அதிகாரத்துக்கு வந்திருக்கும் இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பினும் அவர்கள் மந்திரிப் பதவிகள் எதையும் அடையவில்லை. பதிலாக அவர்களை விடச் சிறிய கட்சியின் பிரதிநிதிகள் மட்டுமே மந்திரிசபையை அலங்கரிக்கிறார்கள்.
இரண்டாவது பெரிய கட்சி மந்திரிப் பதவிகளைப் பெறாமலேயே அமைச்சரையில் இருக்கும் கட்சிகள் மீது தனது முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் விதமாக ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறது. அவற்றில் முக்கியமாக இருக்கும் குடியேறிகள், அகதிகள் ஆகியோர் பற்றிய மாற்றங்கள் சுவீடனில் மட்டுமன்றி ஐரோப்பிய அளவிலும் பெருமளவு பேசப்படுகிறது.
அகதிகளை ஏற்றுக்கொள்வதில், தமது சனத்தொகையுடன் ஒப்பிடும்போது விகிதாசாரத்தில் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளை விட அதிகமானவர்களை அனுமதிக்கும் நாடுகளில் முதன்மையான நாடுகளிலொன்றாக இருந்து வருகிறது சுவீடன். அந்த வழியிலிருந்து மாறி முடிந்த அளவில் அகதிகளை ஏற்க மறுக்கும் நாடாக சுவீடனை மாற்றுவது குறிப்பிட்ட கட்சியின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அவர்களுடைய ஆட்சியில் சுவீடனில் வாழும் குடிவந்தவர்களின் நிலை பல வகைகளிலும் மட்டுப்படுத்தப்படலாம்.
அகதிகளை நாட்டுக்குள் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தவரையில் ஐ.நா-வின் அகதிகள் முகாம்களிலிருந்து இனிமேல் சுவீடன் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அகதிகளை ஏற்றுக்கொள்ளும். சுவீடனுக்குள் அனுமதியின்றி நுழைந்து அகதிகளாகப் பதிந்துகொள்பவர்களை முடிந்தவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் புதிய அரசு உறுதி பூண்டிருக்கிறது. அவைகளில் ஒன்றாக டென்மார்க், ஐக்கிய ராச்சியம் போல அகதிகள் விண்ணப்பம் செய்வோரை சுவீடனுக்கு வெளியே ஒரு நாட்டில் வாழ அனுப்புவது பற்றியும் சிந்திக்கப்படுகிறது.
அகதிகளாக இனிமேல் வருபவர்களுக்கான அனுமதி தற்காலிகமாகவே கொடுக்கப்படும். சமூகத்தின் பொருளாதார உதவிகளைப் புதிதாகக் குடிவந்தவர்கள் பெறுவதானால் அவர்கள் குறிப்பிட்ட அளவு காலம் நாட்டில் வாழ்ந்து, அக்காலத்தில் வேலை செய்து வரி கட்டியிருக்கவேண்டும். அகதி அனுமதி மறுக்கப்பட்டவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற அல்லது அதுவரை சிறைகளில் வைத்திருக்கவும் அரசிடம் எண்ணம் இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்