உத்தியோகபூர்வமாக முடிசூடிக்கொள்ள முதலேயே அதிகுறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவரின் ராஜினாமாவை ஏற்ற அரசன் சார்ள்ஸ்.
ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராக 45 நாட்கள் மட்டும் இருந்த பிரதமர் என்ற அவப் பெயருடன் ராஜினாமா செய்தார் லிஸ் டுருஸ். நாட்டு மக்களின் வரிச்சுமையைக் குறைப்பதில் சாதனை படைத்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உறுதிகொடுத்ததன் மூலம் தனது கட்சியின் ஆதரவைப் பெற்றுப் பிரதமரான அவரது அதிவேகமான வரிகுறைப்பு நடவடிக்கைகளுக்குக் கட்சிக்காரரே முதுகைக் காட்டினார்கள்.
மகாராணியின் இறப்புக்கு முதல் பதவியேற்றுக்கொண்ட லிஸ் டுருஸ் முதன் முதலாகச் செய்யவேண்டிய கடமையாகியது மகாராணியின் மரணச்சடங்குகள். அதையடுத்து அதிவேகமாகத் தனது உறுதிமொழியை நிறைவேற்றுவதாக இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை செப்டெம்பர் 23 ம் திகதி முன்வைத்தார் தனது சகாவான நிதியமைச்சர் கிவாசி கிவார்ட்டாங்குடன் சேர்ந்து.
அறிவித்த மிகப்பெரும் வரிக்குறைப்புக்கள், நிறுவனங்களுக்கான நிதி உதவிகளுக்கு ஈடான தொகை வருமானம் எங்கிருந்து வருமென்று அவர்கள் குறிப்பிடவில்லை. அதன் விளைவாக நாணய வர்த்தகச் சந்தையில் அந்த வரவுசெலவுத்திட்டம் விற்பனையாகவில்லை. பிரிட்டிஷ் பவுண்ட் 1980 ம் ஆண்டுகளுக்குப் பின்னர் விழாத வீழ்ச்சியைக் கண்டது. பிரிட்டனின் கஜானாவின் கடன் என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்தது.
தானும் சேர்ந்து போற்றிப் பெருமை பெற்ற வரிக்குறைப்புகளுக்குக் காரணமாக நிதியமைச்சரைப் பலிக்கடாவாக்கினார், அறிவித்த வரிக்குறைப்புகளை வாபஸ் பெற்றார் லிஸ் டுருஸ். அவரது நடவடிக்கைகள், உறுதிகள், சமாதாங்கள் எதையும் வர்த்தகச் சந்தையோ, சொந்தக் கட்சிக்கார்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, வேறு வழியின்றித் தனது பதவியிலிருந்து இறங்கினார் லிஸ் டுருஸ்.
ஒக்டோபர் 28 ம் திகதிக்குள் புதிய பிரதமரைத் தெரிந்தெடுக்கவிருக்கிறது கொன்சர்வட்டிவ் கட்சி. லிஸ் டுருஸ் வேட்பாளராக இருந்தபோது அவரை எதிர்த்து நின்ற ரிஷி சுனாக் உட்பட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வரை புதிய பிரதமராகலாம் என்ற கிசு கிசு உலாவுகிறது.
குறிப்பிட்ட இன்னொருவர் பின்னால் கட்சியினர் பலமாக அணிசேராவிடில் பொதுத்தேர்தல் நாட்டில் மீண்டும் அறிவிக்கப்படலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்