தனது நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார்.
“உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக ஐரோப்பா நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகப்பெரிய ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது,” என்று திங்கள் கிழமையன்று தெரிவித்தார் நோர்வேயின் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டூரெ. அதனால் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
நோர்த் ஸ்டிரீம் எரிவாயுக் குளாய் மீதான தாக்குதல், நோர்வேயின் எண்ணெய்க் கிணறுகள், எரிபொருள் சேகரிப்பு மையங்கள், போக்குவரத்து மையங்கள் மீதான சமீபத்தைய காற்றாடி விமான பறப்புகள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய கவனத்தை உயர்த்தவேண்டியதாக்கியிருக்கிறது என்று ஸ்டூரெ பத்திரிகையாளர் மாநாடு ஒன்றைக் கூட்டித் தெரிவித்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் அவர்களை வெவ்வேறு முறைகளில் போரைத் திருப்பத் தூண்டியிருக்கிறது என்று ஸ்டூரெ சுட்டிக்காட்டினார். நோர்வேயின் வடக்கில் ரஷ்யாவுடனான எல்லையில் பாதுகாப்பை ஒரு படி உயர்த்துவதற்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்