நான்கு வருடங்களில் இஸ்ராயேலில் நடந்த ஐந்தாவது தேர்தல், முன்னாள் பிரதமர் நத்தான்யாஹுவை மீண்டும் அரசமைக்கக்கூடும்.
நவம்பர் முதலாம் திகதியன்று இஸ்ராயேலில் நடந்த பொதுத் தேர்தலின் ஏறத்தாழச் சகல வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்டன. முடிவுகள் பாதியளவு வெளிவர ஆரம்பித்தபோதே முன்னாள் பிரதமரும், பல ஊழல்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பவருமான பெஞ்சமின் நத்தான்யாஹுவின் வலதுசாரித் தேசியவாதிகள் அணி பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகள் தெரிய ஆரம்பித்திருந்தன. இந்த முறை அவருடைய கட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருக்கும் கட்சியானது நிறவெறி, அராபியத் துவேஷம் கொண்டது என்று சுட்டிக்காட்டி அரசியல் அவதானிகள் விமர்சித்து வருகிறார்கள்.
நத்தான்யாஹுவின் லிக்குட் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியுமாகப் பாராளுமன்றத்தின் 120 இடங்களில் 65 ஐ வென்றிருக்கின்றன. ஆட்சியிலிருந்து தங்களுக்குள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த அணியினருக்கு 50 இடங்களே கிடைத்திருக்கின்றன.
இஸ்ராயேலின் சரித்திரத்தில் அதிக காலமாக 12 வருடங்கள் பிரதமராக இருந்தவர் நத்தான்யாஹூ. 73 வயதான அவர் கடந்த 14 மாத காலம் எதிர்க்கட்சியில் இருந்தார். பதவியிலிருக்கும்போது பலவித ஊழல்களைச் செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளாகவும், விசாரணைகளாகவும் இருக்கின்றன. அவைகளில் ஒர் வழக்கு அடுத்த திங்களன்று நீதிமன்றத்தில் ஆரம்பிக்கவிருக்கிறது.
இத்தமார் பென் கிவிர் என்ற நத்தான்யாஹு இம்முறை கூட்டுச்சேர்ந்திருக்கும் கட்சியின் தலைவர் தனது அராபிய வெறுப்புக் காரணமாகத் தண்டிக்கப்பட்டவர். உள்துறை அமைச்சர் அவரது கையில் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இஸ்ராயேல் யூதர்களுக்கு மட்டுமே என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்துவரும் அவர் பாலஸ்தீனர்களின் அதிகாரத்தை மேலும் மட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிவருபவர். எனவே, நத்தான்யாஹு அமைக்கத் திட்டமிட்டிருக்கும் அரசு பாலஸ்தீனர்களுடைய உரிமைகளை மேலும் பறித்தெடுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்