எகிப்தில் ஆரம்பமாகியது காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் திட்டமிடும் COP27 மாநாடு.
உலகக் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டு வரும் அழிவுகளை மட்டுப்படுத்த ஐ.நா -வின் தலைமையில் நடத்தப்படும் COP27 மாநாடு எகிப்தின் ஷார்ம் அல் ஷேய்க் நகரில் ஆரம்பமாகியது. பணக்கார நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட காலநிலையின் விளைவுகளால் வறிய நாடுகளே பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பித்திருக்கும் COP27 மாநாடு அவ்விடயத்தில் இரண்டு தரப்பாருக்குமிடையே அதற்கான சமநீதியை உண்டாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தியிருக்கிறது.
ரியோ டி ஜெனீரோவில் ஐ.நா-வின் தலைமையில் 1992 இல் நடத்தப்பட்ட காலநிலை மாற்றங்கள் பற்றிய மாநாடுகளின் வரிசையில் 27 வது மாநாடே எகிப்தில் நடக்கிறது. 200 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் சந்தித்து தாம் வரவிருக்கும் ஆண்டுகளில் வெவ்வேறு துறைகளில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பேரம் பேசி முடிவுக்கு வரவேண்டும்.
2015 இல் பாரிஸில் இதுபற்றி நடந்த மாநாட்டில் உலகின் சராசரிக் காலநிலையை 1.5 செல்சியஸுக்கு அதிகமாகாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது என்று எல்லா நாடுகளும் ஒத்துக்கொண்டன. ஆனால், தற்போதைய நிலைமையில் அதற்கான சாத்தியக்கூறுகளெதுவும் இல்லையென்பது எல்லாரும் மென்று விழுங்கும் உண்மையாக இருக்கிறது.
படிம எரிபொருட்களைப் பாவித்தல் நிறுத்தப்படவேண்டும்.
வறிய நாடுகள் தமது பிராந்தியங்களில் காலநிலை மாற்றங்களால் அடைந்துவரும் சேதங்களை நிறுத்தி எதிர்காலத்தில் அப்படியானவை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கக்களை எடுக்கப் பணக்கார நாடுகள் உதவவேண்டும்.
மேற்கண்ட இரண்டு விடங்கள் இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்களைச் சந்திக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த மாநாட்டின்போது இருந்தது போலன்றி நிலைமை உலகளவில் மாறியிருக்கிறது. கொரோனாக்கட்டுப்பாடுகளை அடுத்து வந்த காலம் ரஷ்யவின் உக்ரேன் மீதான போரால் ஏற்பட்டிருக்கும் அரசியல் இழுபறிகளால் பணக்கார நாடுகளும் பொருளாதார இழப்பையும், பணவீக்கத்தையும் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் அவை வறிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் மனோநிலையில் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான குறிக்கோளை குறிப்பிட்ட சமயத்தில் எட்டலாம் என்ற நம்பிக்கை தற்போது இல்லையென்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேசமயம் பத்து வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்தது போன்று 3.5 செல்சியஸ் அளவில் உலகம் வெம்மையடையவில்லை என்பது ஆறுதலான செய்தி. போரின் காரணமாக உலகில் எரிசக்தி விலை அதிகமாகியிருப்பதால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சூழலைப் பாதிக்காத எரிசக்தியை உண்டாக்கும் வழிகளில் முதலீடு செய்வது பெருமளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் ஒரு நற்செய்தியே.
சாள்ஸ் ஜெ. போமன்