ஜி 20 மாநாட்டுக்காக, ஞாயிறன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்திறங்கினார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.
உக்ரேன் மீது ர்ஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியதன் பின்னர், முதல் தடவையாக நடக்கப்போகும் ஜி 20 நாடுகளின் உச்ச மாநாட்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் வருவாரா என்ற கேள்விக்கு மறுமொழி கிடைத்தது. தற்போதைய சர்வதேச அரசியல் குழப்பச் சமயத்தில் அங்கே சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொண்டு தனது வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவை ஒரு குழுவுடன் அனுப்பியிருக்கிறார் விளாமிடிர் புத்தின்.
இந்தோனேசிய ஜனாதிபதி தான் ரஷ்யா – உக்ரேன் போரில் ஒரு தீர்வுக்காக முயற்சி செய்யத் தயார் என்று பகிரங்கமாகத் தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதியை ஜி 20 மாநாட்டில் பங்குபற்ற வரவழைப்பதில் பெரும் முயற்சி செய்தார். ஆனால், கடந்த வாரத்திற்கு முன்னர் அதுபற்றிய சந்தேகத்தை அவர் தெரிவித்திருந்தார்.
ஞாயிறன்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லவ்ரோவ் பாலியில் வந்திறங்கியிருப்பதாக உள்ளூர்ச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அங்கே அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் சமூகமளிக்கவிருக்கிறார்கள்.
நவம்பர் 14 – 17 ம் திகதிகளுக்குள் சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், செனகல், ஜேர்மனி, இந்தியா, ஐக்கிய ராச்சியம், ஆர்ஜென்ரீனா நாட்டுத் தலைவர்களும் பாலியில் வந்திறங்கவிருக்கிறார்கள். வேறு பல விடயங்களில் அமெரிக்காவுடன் தமக்கு ஒரேவித நிலைப்பாடுகள் இல்லாவிடினும் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் நெருங்கிவரவேண்டும் என்று சமீபத்தில் சீனாவின் தலைவர் ஷீ யின்பிங் தெரிவித்திருந்தார். அவர் அங்கே அமெரிக்கா, செனகல், பிரான்ஸ், ஆர்ஜென்ரீனா நாட்டுத் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
சாள்ஸ் ஜெ. போமன்