உதைபந்தாட்டம் அதன் நட்சத்திரங்கள் மீதான அதீத பிரியம், இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார் கேரளப் போதகரொருவர்.
சுன்னி இஸ்லாமிய மார்க்கத்தின் சமஷ்டா கேரளா ஜம் – இய்யத்துல் உலாமா உதைபந்தாட்டத்தின் அதீத விசிறிகளின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருக்கிறது. இந்திய மாநிலங்களில் உதைபந்தாட்டத்தில் ஆழமான காதல் கொண்டிருக்கும் விசிறிகளைக் கொண்ட மாநிலமாகத் திகழும் கேரளாவில் விசிறிகள் தமது அபிமான நட்சத்திரங்கள் சிலருக்கு கட் அவுட் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அதை இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார்கள் குறிப்பிட்ட முஸ்லீம் அபைப்பினர்.
“இந்தியாவைத் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து போர்த்துக்கீசர்கள் நாட்டின் வளங்களைச் சுரண்டினார்கள். உதைபந்தாட்டத்தில் பெரும் ஆர்வமுள்ள நாடுகள் பல இஸ்லாத்துக்கு எதிரானவை. அப்படியிருக்கும்போது அந்த நாட்டு வீரர்களுக்கு விசிறிகளாக இருப்பது எந்த அளவில் நியாயம்,” என்று சமஷ்டா கேரளா ஜம் – இய்யத்துல் உலாமா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
“ஒரு இசையைக் கேட்பது, குறிப்பிட்ட ஒருவரைத் தொடர்வது, வணங்குவது, காலையில் நடக்கப் போவது எல்லாம் அவரவர் விருப்பம். அதேபோலவே சமஷ்டா கேரளா ஜம் – இய்யத்துல் உலாமா அமைப்பும் தான் விரும்புவதைச் சொல்லலாம்,” என்று மாநிலத்தின் கல்வியமைச்சர் வி.சிவன்குட்டி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
வெள்ளியன்று கேரளாவெங்கும் ஜூம்மா தொழுகைகள் நடக்கும்போது மேற்கண்ட செய்தியை முஸ்லீம்கள் எல்லோருக்கும் தெரிவிக்கவிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்