வாக்களிப்பு வயது கீழ் எல்லை 18 ஆக இருப்பது ஒரு சாராரை, வகைப்படுத்தி ஒதுக்குகிறது என்றது நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றம்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்து நீதிமன்றத்திற்குச் சென்ற Make It 16 என்ற அமைப்பானது வாக்களிப்பவர்களின் வயது கீழ் எல்லை 16 வயதாக்கப்பட வேண்டும் என்று கோரியது. அது பற்றிய தீர்ப்பை வெளியிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம் அந்த அமைப்புக்குச் சார்பாக – வாக்களிப்பு வயது கீழ் எல்லை 16 ஆக்கப்படவேண்டும் – என்று தீர்ப்பளித்திருக்கிறது. தற்போது 18 ஆக இருக்கும் அந்த எல்லையானது ஒரு சாராரை நியாயமின்றி ஒதுக்கிவைப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
நியூசிலாந்தில், மனித உரிமைகளுக்காக ஒடுக்கப்படலிலிருந்து பாதுகாப்பு, என்பது 16 வயதிலிருந்து ஆரம்பமாகிறது. அவ்வயதை அடைந்தவர்கள் வாகனங்கள் ஓட்டலாம், முழு நேரம் வேலை செய்யலாம், அதற்கான வரிகளையும் கட்டவேண்டும் என்ற நிலைமையில் அவர்கள் வாக்களிக்கலாகாது என்று கட்டுப்படுத்துவது நியாயமல்ல என்று Make It 16 அமைப்பு குறிப்பிட்டு வருகிறது. கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளின் விளைவுகள், எதிர்காலக் காலநிலை மாற்றம் ஆகியவை இளவயதினரைப் பெரிதும் பாதிக்கும் என்பதும் வாக்களிப்பு வயது எல்லைக் குறைப்பதற்கான ஒரு காரணம் என்று அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சனத் சிங் சுட்டிக் காட்குகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில், வாக்களிப்பு வயது எல்லையைக் குறைப்பது பற்றி வாக்கெடுப்பு நடத்த, நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் திட்டமிட்டிருக்கிறார். தன்னளவில் அந்த முடிவை ஆதரிப்பதாக ஆர்டென் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
120 இடங்களைக் கொண்ட நியூசிலாந்துப் பாராளுமன்றத்தின் 75 % ஆதரவைப் பெற்றாலேயே அந்த முடிவு நடைமுறைக்கு வரலாம். எதிர்க்கட்சிகளின் பெரிய கட்சியான தேசியக் கட்சி வாக்களிப்பு வயதுக்குறைப்பை விரும்பவில்லை. அவர்கள் பாராளுமன்றத்தில் 33 இடத்தைக் கொண்டிருக்கிறர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்