“எங்கள் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கக் கப்பலைத் துரத்தினோம்,” என்கிறது சீனா.
தென்சீனக் கடல் எல்லைக்குள் சர்வதேச அளவில் சீனாவுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட அதிகமான பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்று பக்கத்து நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்ரேலியா, இந்தியா நாடுகள் தமது கடற்படைக் கப்பல்களை ரோந்துக்கு அனுப்பி வருகின்றன.
அப்பிராந்தியத்தில் இருக்கும் ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அருகே அமெரிக்கக் கடற்படையின் கப்பல் நுழைந்ததாகச் சீனா குற்றஞ்சாட்டியிருக்கிறது. அக்கப்பலைத் தாம் விரட்டியதாகச் சீனாவின் இராணுவம் தெரிவிக்கிறது.
USS Chancellorsville என்ற பெயருள்ள அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் சமீபத்தில் தாய்வான் நீரிணைக்குள் பயணம் செய்தது. நீண்ட தூரத்தை அடையும் ஏவுகணைக்குண்டுகளைத் தாங்கிய கப்பல் அதுவாகும்.
“அமெரிக்காவின் நடத்தை பாதுகாப்புக்கு இடையூறு செய்வதுடன் சீனாவின் பிராந்திய அதிகாரத்துக்குள் குறுக்கிடுகிறது,” என்று சீன இராணுவத் தளபதியொருவர் குறிப்பிட்டார். தாய்வான் நீரிணைக்குள் அமெரிக்கா தனது கடற்படைக் கப்பலை அனுப்பியிருந்தது என்ற செய்தி வெளியாகியிருந்தது. சீனாவின் கருத்துக்குப் பதிலெதுவும் அமெரிக்காவால் இதுவரை வெளியிடப்படவில்லை.
பிலிப்பைன்ஸ், புரூனெய், மலேசியா, வியட்நாம், தாய்வான் ஆகிய நாடுகளுக்கும் உரிமை உள்ளதாகச் சர்வதேச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட கனிம வளமுள்ள பகுதிகளெல்லாம் தனக்கு மட்டுமானதே என்கிறது சீனா. அதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா தனது கடற்படையின் கப்பல்களை தென் சீனக் கடல் பிராந்தியத்துக்குள் “சுதந்திரமான நடமாட்ட உரிமை” என்று குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்