சீனர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியதால் கொம்யூனிஸ்ட் தலைமை கொவிட் 19 முடக்கங்களைக் கைவிடும் சாத்தியம்.
கொரோனா பரவாமல் நகர முடக்கங்களைச் சளைக்காமல் நடைமுறைப்படுத்தி வந்த சீனாவில் அந்த நடவடிக்கையின் காட்டம் மெதுமைப்படுத்தப்படலாம் என்ற சைகைகள் காட்டப்படுகின்றன. “நாட்டு மக்களைக் கொவிட் 19 இன் கொடுமையிலிருந்து முடிந்தவரை காப்பாற்றியவர் ஷி யின்பிங்” என்ற விளம்பரத்துடன் “ஒரு கொவிட் நோயாளியும் வெளியே திரியலாகாது,” கோட்பாட்டை இதுவரை சளைக்காமல் நிறைவேற்றி வந்திருக்கிறது சீனா. கடந்த வாரத்தில் சீனர்கள் கடுமையான நகர முடக்கங்களுக்கெதிராகக் குரல் கொடுத்த பின்னர் அரசின் போக்கு மாறியிருப்பதாகத் தெரிகிறது.
நகர முடக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் பல மில்லியன் குடிமக்களைக் கொண்ட நகரங்களில் அந்த முடக்கங்கள் முழுமையாக அல்லது பகுதியளவு நீக்கப்படுவதாக சீன அரசின் தினசரியில் செய்தி வெளியாகியிருக்கிறது. எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த பகுதிகளில் பொலீசாரின் நடமாட்டம் அதிகரிக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், தொற்றுக்களின் எண்ணிக்கையோ தொடர்ந்தும் மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அப்படியான நிலையில் முடக்கங்களைத் தளர்த்துதலோ, அகற்றுதலோ நடக்காத காரியங்களாக இருந்து வந்தன.
‘கொரோனாக் கிருமிகளிலொன்றான ஓமிக்ரோன் தொற்றானது தனது தீவிரத்தில் பலவீனமாகியிருக்கிறது. அதனால் நாட்டின் கொரோனாத்தொற்றுக் கையாளலில் மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது,’ என்று சீனாவின் உப பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
இதுவரை தடுப்பூசிகளைப் போடுதல் இளவயதினரிடையேயே முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் வயதானவர்களிடையே பலருக்கு அது கிடைக்கவில்லை. அரசு தற்போது முதியவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி, முன்னிலைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியோர் அதற்காகத் தனியாக ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் மையங்களுக்குச் செல்லாமல் தத்தம் வீட்டிலேயே தங்கித் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்ற மாற்றம் கொண்டுவரப்படவிருப்பதாகச் செய்திகளும், சமூகவலைத்தளங்களும் குறிப்பிடுகின்றன. அந்த நடவடிக்கை தலைநகரில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்