பிரேசிலின் ஆறாவது வெற்றிக்கிண்ணக்கனவு நனவாகாததால், ஆர்ஜென்ரீனா மட்டுமே தென்னமெரிக்கர்களின் கனவுக்கு உயிர்கொடுக்கக்கூடும்.
கத்தார் 2022 இன் காலிறுதி மோதல்களில் முதலிரண்டும் வெள்ளிக்கிழமையன்று நடந்தேறின. இரண்டிலுமே முதல் 90 நிமிடங்களும் அதையடுத்துக் கொடுக்கப்பட்ட பிரத்தியேக நேரங்கள் முடிந்தும் அணிகளிருவரும் சமமாகவே இருந்ததால் எதிரணியினரின் வலைகளுக்குள் பந்தை நேரடியாக உதைப்பதன் மூலமே முடிவெடுக்கப்படவேண்டியதாயிற்று. அவைகளில் வென்ற கிரவேசியாவும், ஆர்ஜென்ரீனாவும் அரையிறுதி மோதல்கள் ஒன்றில் சந்திக்கவிருக்கிறார்கள்.
இரண்டாவது மோதலில் பங்குபற்றிய நெதர்லாந்தும், ஆர்ஜென்ரீனாவும் முதல் பகுதியில் சமமாகவே விளையாடிக்கொண்டிருந்தன. முதலாவது தடவை பந்து வலைக்குள் பாய்ந்தபோது 35 நிமிடங்கள் கடந்துவிட்டன. ஆர்ஜென்ரீனாவில் மட்டுமன்றி உலகெங்கும் பெருமளவில் விசிறிகளைக் கொண்ட லயனல் மெஸ்ஸி நுணுக்கமாகப் பந்தை எடுத்துச்சென்று வசமாக நின்ற நஹுவேல் மொலீனாவிடம் கொடுக்க ஆர்ஜென்ரீனா 1 – 0 என்று முன்னேறியது. 73 வது நிமிடத்தில் நெதர்லாந்து வலைக்கருகே நடந்த தவறொன்றுக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையாக மெஸ்ஸி மேலுமொரு தடவை பந்தை வலைக்குள் போட 2 -0 என்று மேலும் முன்னேறினார்கள் தென்னமெரிக்க அணியினர்.
வழக்கமான மோதல் நேரமான 90 நிமிடங்களில் கடைசி பத்து நிமிடங்கள் வெற்றித் தேவதை மனதை மாற்றிக்கொண்டு நெதர்லாந்தின் பக்கம் சேர்ந்தாள். வூட் வெகோஸ்ட் அந்த நேரத்தைப் அருமையாகப் பயன்படுத்திக்கொண்டு தனது அணியை 2 – 2 என்ற நிலைமைக்குக் கொண்டுவந்தார். எவருமே வெற்றிகொள்ளாத நிலையில் நேரம் நீட்டப்பட்டு இரண்டு அணிகளும் தொடர்ந்தும் மோதிக்கொண்டார்கள். ஆர்ஜென்ரீன அணியினரின் கால்கள் அச்சமயத்தில் படுதுரிதமாக இயங்கியும் நிலைமை மாறவில்லை.
இறுதியில் ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து வலைக்காப்பாளர்களில் எவரால் திறமையாக பந்தை உள்ளே நுழைய முடியாமல் தடுக்க முடியும் என்ற போட்டிக்கே மோதல் தள்ளப்பட்டது. ஆர்ஜென்ரீனாவின் எமிலியானோ மார்ட்டினெஸ் தனது அணியின் காவலனாகவும், கதாநாயகனாகவும் மாறி ஆர்ஜென்ரீனாவுக்கு மட்டுமல்ல தென்னமெரிக்காவுக்குமே வெற்றிக்கோப்பைக் கனவை நிலைக்கவைத்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்