ஒரு வருடத்துக்கு முன்னர் COP26 மாநாட்டில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது ஐக்கிய ராச்சியம்.
கிளாஸ்கோவில் காலநிலை மாநாட்டை நடத்தியபோது கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறப்பதில்லை என்ற வாக்குறுதியைக் கொடுத்த ஐக்கிய ராச்சியத்தின் அரசு ஒரு வருடத்திலேயே அதை மீறியது. கும்பிரியாவில், வைட்ஹேவனில் நிலக்கரிச் சுரங்கத்தைத் திறப்பதறான அனுமதியைக் கொடுத்தார், அமைச்சர் மைக்கல் கோவ்
முப்பது வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்தின் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க முதல் தடவையாக அனுமதி கொடுத்திருப்பதை விஞ்ஞானிகள், சூழல் பேணும் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய ராச்சியத்தின் சுற்றுப்புற சூழல் திணைக்களத்தின் ஆலோசகர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். வருடாவருடம் 9 மில்லியன் தொன் நச்சுவாயுவை வளிமண்டலத்தில் வெளியேற்றகூடிய அந்தச் சுரங்கம் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் உக்ரேன் போரை எதிர்க்கும்வகையில் அங்கிருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்திய நாடுகளில் ஒன்று ஐக்கிய ராச்சியம். அதனால் எரிசக்திக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் எரிசக்தியின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதனால் சகல பொருட்களின் விலைகளும் உயர்ந்து வாழ்க்கைச்செலவு அதிகரித்திருக்கிறது. அந்த நிலையை எதிர்கொள்வதற்காகவும் நிலக்கரிச்சுரங்கத்தைத் திறப்பதாக அரசு வாதிக்கிறது.
சுரங்கத்தில் எடுக்கப்படும் நிலக்கரியில் 85 % ஏற்றுமதி செய்யப்படவிருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சூழலுக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் எரிசக்தியைத் தயாரிப்புகளை அதிகரிப்பதற்கும் நிலக்கரிச் சுரங்கத் திறப்பு நேரெதிராக இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஐக்கிய ராச்சியம் சொல்வது ஒன்று செய்வதென்று என்ற பெயரையே சர்வதேச ரீதியில் பெறும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்