நவம்பரில் சர்வதேசப் பாரம்பரியம் என்ற பட்டியலில் சேர்ந்துகொண்ட பிரெஞ்ச் பகெட்டுக்கு [baguette] ஆபத்து!
பிரான்ஸ் ரொட்டித் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்புச் செலவுகளைப் பெருமளவில் உயர்த்தியிருக்கும் மின்சாரக் கட்டணங்களால் தமது சூளைகளைப் பாவிப்பதற்கே தயங்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே விலை அதிகரித்திருக்கும் சர்க்கரை, வெண்ணெய், கோதுமை மாவு ஆகியவற்றுடன் சமீபத்தில் பன்மடங்காக அதிகரித்திருக்கும் மின்சாரச் செலவானது ரொட்டித் தயாரிப்பைப் பெருமளவில் பாதிக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியால் “250 கிராம் பூரணத்துவமும், மாயவித்தையும்” என்று பாராட்டப்பட்ட நீண்ட பகெட் [baguette] ரொட்டி, கொரிசோன் எனப்படும் சிறிய வெண்ணெய் ரொட்டி [croissant ] ஆகியவை பிரான்ஸ் மக்களின் அன்றாட உணவுகளில் ஒன்றாகும். அவைகளைத் தயாரிக்கும் 35,000 வெதுப்பகங்கள் இழுத்து மூடப்படாமல் பாதுகாப்பது அரசின் முக்கிய அவசியமாகும்.
சுமார் 3 முதல் 12 மடங்கு வரை தமது எரிபொருள் செலவு அதிகரித்திருப்பதாகப் பல வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். நாளாந்தம் அங்குமிங்கும் வெதுப்பகங்கள் மூடப்படுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வெதுப்பகங்களால் தமது செலவுகளைத் தாங்க முடியாவிட்டால் கட்டணங்களை செலுத்துதைப் பின்போடும்பட விண்ணப்பிக்கலாம் என்கிறார் பிரெஞ்ச் பிரதமர். வெதுப்பக உரிமையாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார் நாட்டின் பொருளாதார அமைச்சர்.
“பிரான்ஸ் மக்களின் பெருமையான பகெட் சர்வதேசப் பாரம்பரியம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும்போது நாம் அவற்றைத் தயாரிக்கும் வெதுப்பகங்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டியது அவசியம், “ என்கிறார் பொருளாதார அமைச்சர் புரூனோ லீ மரி.
சாள்ஸ் ஜெ. போமன்