தமக்கிடையிலான சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள பிலிப்பைன்ஸ், சீனத் தலைவர்கள் ஒப்பந்தம்.
தென்சீனக்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பதட்ட நிலைமையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியான பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் சீனாவின் தலைநகருக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். பீஜிங்கில் மார்க்கோஸ் ஜூனியரைச் சந்தித்த சீன ஜனாதிபதி ஷீ யின்பிங் தமது நாடுகளுக்கு இடையே இருக்கும் நீர்ப்பரப்புச் சம்பந்தமான சச்சரவுகளை நேரடியான தொடர்புகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்வதாக முடிவுசெய்திருக்கிறார்கள். இரண்டு நாடுகளும் அதை உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கை மூலம் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் தனக்குச் சொந்தமாகக் கருதும் தென்சீனக் கடல் பிராந்தியத்துக்குள் சீனா பல தடவைகள் அத்துமீறிப் புகுந்ததுமன்றி அங்கிருக்கும் குட்டித் தீவுகளில் தனது இராணுவத்துக்கான மையங்களைக் கட்டியிருப்பதும் அவ்விரும் நாடுகளுக்கிடையே நீண்ட காலமாகப் பிரச்சினைக்குரியதாக இருந்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, கனிமங்கள் மற்றும் மீன்வளம் நிறைய இருக்கும் அப்பகுதிகளைச் சீனா ஆக்கிரமிப்பதை எதிர்த்து 2016 இல் ஐ.நா-விடம் பிலிப்பைன்ஸ் முறையீடு செய்தது. பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாகவே கொடுக்கப்பட்ட தீர்ப்பைச் சீனா ஏற்க மறுத்து வருகிறது.
2023 இல் சீனா வரவேற்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மார்க்கோஸ் ஜூனியர் என்பது தாம் பிலிப்பைன்ஸுடன் நட்பாக இருப்பதையே விரும்புவதைக் காட்டுவதாக சீனத்தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்