மியான்மாரிலிருந்து வெளியேற முயன்ற 112 ரோஹிங்யா இனத்தோர் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மியான்மாரின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டுவரும் இராணுவ அரசு நாட்டை விட்டு வெளியேற முற்படும் ரோஹின்யா இனத்தவரைக் கைதுசெய்யவும், தண்டிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. ஒரு டசின் பிள்ளைகள் உட்பட்ட 112 பேர் கைது செய்யப்பட்டுச் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியிருப்பதாகவும் அரச செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்யா இனத்தவர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். பெரும்பாலான ரோஹிங்யா அகதிகள் பங்களாதேஷில் தற்காலிகப் புகலிடம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
டிசம்பர் மாதத்தில் எந்தவிதப் பத்திரங்களுமின்றி குறிப்பிட்ட குழுவினர் மோட்டார் படகொன்றில் நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் வயதுவந்தவர்களுக்குத் தலா 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகளில் ஐந்து பேர் 13 வயதுக்குட்பட்டவர்களென்றும் அவர்களுக்குத் தலா 2 வருடச் சிறைத்தண்டனை மற்றவர்களுக்கு 3 வருடச் சிறைத்தண்டனைகளும் வழங்கப்பட்டு வயது குறைந்தவர்களுக்கான சிறைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்