“அராபிய வளைகுடா உதைபந்தாட்டப் போட்டி” என்ற பெயர் ஈரானைக் கோபப்படுத்தியிருக்கிறது.
ஈராக்கின் பஸ்ரா நகரில் நடந்துவரும் உதைபந்தாட்டப் போட்டியின் பெயர் ஈரானுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அதன் காரணம் ஈரான் பங்குபற்றாத அந்த மோதல்களின் பெயர் [அராபியக் குடாநாடுகளுக்கான வெற்றிக்கிண்ணம் ] அராபிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையேயிருக்கும் நீர்ப்பரப்பை எப்படிக் குறிப்பிடுவதென்ற சர்ச்சைகள் ஆகும். தனது அதிருப்தியை ஈராக்குக்கான ஈரானியத் தூதர் மூலம் ஈரான் தெரிவித்திருக்கிறது.
அராபிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையேயிருக்கும் நீர்ப்பரப்பின் பெயர் “பாரசீக வளைகுடா” என்றழைக்கப்படவேண்டும் என்பது ஈரானின் தெளிவான நிலைப்பாடாகும். ஆராபிய நாடுகளோ அதை “அராபிய வளைகுடா” என்றழைக்கின்றன. சர்வதேச அளவிலும் “அராபிய வளைகுடா” என்றே அந்த நீர்ப்பரப்பு குறிப்பிடப்பட்டு வருகிறது.
நடந்துவரும் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்களில் குவெய்த், எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரேய்ன், ஈராக், சவூதி அரேபியா, ஓமான், யேமன் ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன. அதன் ஆரம்ப நிகழ்ச்சியின்போது அதை “அராபியக் குடாநாடுகளுக்கான வெற்றிக்கிண்ணத்துக்கான மோதல்கள்” என்று சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் தலைவர், ஈரானியப் பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டனர். சர்வதேச ஊடகங்களும் அப்பெயரிலேயே அதைக் குறிப்பிட்டு வருகின்றன.
ஈரானிய அதிகாரிகள் தமது அதிருப்தியை ஈராக் அரசுக்குத் தெரிவித்ததுடன் “அராபிய வளைகுடா” என்ற பெயரைப் பாவித்ததுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். ஈராக் அரசு அந்தக் கோரிக்கைக்குக் காதுகொடுக்கவில்லை. ஈரானுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஈராக்கிய அரச உயர்மட்டத்தில் அத்தொடர்புகளைப் பேணவேண்டும் என்ற விருப்பம் ஆழமாக இருந்து வருகிறது. ஈரானின் அதிருப்தியை அறிந்த பின்னர் ஈராக்கியப் பிரதமர், உயரதிகாரிகள் சமூகவலைத்தளங்கள், உத்தியோகபூர்வமான அறிக்கைகளில் “வளைகுடா நாடுகளுக்கான வெற்றிக்கிண்ணம்” என்று குறிப்பிடுகின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்