பதவியிலிருந்து விலக மறுத்துவரும் பெரு ஜனாதிபதி மக்களிடம் மன்னிப்பை வேண்டினார்.
ஜனாதிபதி டீனா பூலார்ட்டேயைப் பதவியிறங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்ந்தும் பெருவில் நடந்து வருகின்றன. பதவி விலக்கப்பட்ட தேர்தலில் வென்ற ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோவுக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டங்கள் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாடெங்கும் தொடர்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைப் பதவியிறக்கக் காரணம் தமது ஊழல்களை மறைக்கவே என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பாராளுமன்றத்தைக் கலைக்க முற்பட்டதாகக் கூறப்பட்டுப் பதவியிறக்கப்பட்ட ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோ தொடர்ந்தும் பொலீஸ் காவலிலேயே இருந்து வருகிறார். நாடெங்கும் நடந்துவரும் போராட்டங்களில் 40 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பது பற்றி ஜனாதிபதி பூலார்ட்டே மீது சமீபத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் வேண்டுகோளை ஏற்றுப் பதவிறங்க மறுத்துவரும் பூலார்ட்டே அந்த் இறப்புகளில் தனக்குப் பொறுப்பு இல்லையென்று குறிப்பிட்டாலும், தனது ஆட்சியில் அவை நடந்ததற்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
“நான் எனது நாட்டுக்காக எடுத்திருக்கும் இந்தப் பொறுப்பிலிருந்து விலகத் தயாராக இல்லை. தீவிரமான கோட்பாடுகளைக் கொண்ட ஒரு சாரார் மக்களிடையே ஒழுங்கின்மை, சஞ்சலத்தை ஆகியவற்றை உண்டாக்கி நாட்டைச் செயற்படாத நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுவரும் வன்முறைகள், அவற்றின் விளைவுகளுக்கு நான் மன்னிப்புக் கோருகிறேன்,” என்று பூலார்ட்டே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பெருவில் இருக்கும் புராதனக் கட்டடங்களைக் கொண்ட மச்சு பிச்சு பிராந்தியம் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமானது. அதையடுத்திருக்கும் நகரத்தின் விமான நிலைய வளாகத்திலும் மக்கள் போராட்டத்தினால் ஒழுங்கின்மை ஏற்பட்டுக் கைகலப்புகள் நடந்திருக்கின்றன. அதன் காரணமாக மச்சு பிச்சு பகுதியைச் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடிவிட்டதாக அரசு அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்