இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 3

சுனாமியின் பின்னரான மீள்கட்டுமான செயற்பாடுகளை மிகத் துரிதமாகவும் குறுகிய காலத்திலும் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம், பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இந்த அழுத்தம் நிறுவனங்களை ஒரு சில வழமையான நடைமுறைகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு செயற்படும் சூழலை ஏற்படுத்தியது.  

இதற்கு முந்தைய பகுதி 1 மற்றும் பகுதி 2 கட்டுரைகளை வாசிக்க👇

ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும்

இவ்வாறு வீடுகள் மற்றும் வீதிகள் என்பவற்றை மீளக் கட்டமைக்க மிகக் குறுகிய கால அவகாசமே கொடை அமைப்புகளால் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பல நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், சில விதிமீறல்கள் தெரிந்தும் தெரியாமலும் அனுமதித்தன. இது அதிகார துஸ்பிரயோகம், பணத்தை தவறாகக் கையாளுதல் என்பவற்றுக்கு இலகுவாக வழிவகுத்தது.

தமக்கு நன்கு தெரிந்தவருக்கு அல்லது உறவினருக்கு ஒப்பந்தத்தைக் கொடுப்பதற்கு எதுவாக அவரிடமே வேறு வேறு நிறுவனங்களின் பெயரில் ஒப்பந்த விண்ணப்பங்களைப் பெற்று அவருக்கே குறித்த கட்டடம், வீதியை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்கிய சம்பவங்கள் தாரளமாக நடந்தேறின. சில இடங்களில் ஒப்பந்தக்காரரிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தங்களை வழங்கிய சம்பவங்களும் நடந்தன.

வீதியமைத்தல் ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை சில அதிகாரிகள் காசு வாங்கினாலும் வேலையின் தரமும் கால அளவும் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் சில இடங்களில் அதிகாரிகளுக்கு அதுபற்றிய அக்கறை இருக்கவில்லை. அதனால் சில இடங்களில் தரம் குறைந்த வீதிகள் அமைக்கப்பட்டன. இந்த விடயத்தில் மிக மோசமான விடயமாகச் சொல்லக்கூடியது, வீதியை அமைக்காமலே வீதி அமைத்ததாகக் கூறி அதற்கான ஆவணங்களையும் தயாரித்து முழுப் பணத்தையுமே திருடிய சம்பவங்களும் நடைபெற்றன.

இதில் வேதனையான விடயம் என்னவெனில் இவ்வாறு ஊழலில் ஈடுபட்டவர்களில் பலர் எதுவித தண்டனையும் இன்றித் தப்பிக் கொண்டார்கள். நிறுவனங்கள் தமது நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக விடயத்தை மூடி மறைத்து உள்ளக விசாரணையின் பின்னர் குறித்த உத்தியோகத்தர்களை எதுவித தண்டனையும் இன்றி அவர்களுடனான தொழில் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதோடு நின்றுவிட்டது. அதனால் அவர்களால் இலகுவாக வேறு நிறுவனத்தில் இணைந்து வேலை செய்ய முடிந்தது. அவர்களில் சிலர் தற்போது அவர்கள் இலங்கையில் பணி செய்யும் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களில் உயர்பதவிகளில் இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதவளப் பற்றாக்குறையும் தொழிற்சந்தையில் மாற்றமும்

மீள்கட்டமைப்பு வேளைகளில் எண்ணற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அலுவலகங்கள் அமைத்து தொழிற்படத் தொடங்கியபோது அவர்களிடம் போதுமான நிதிவளம் இருந்தது மற்றும் உபகரண வளங்கள் தாராளமாக இருந்தன. ஆனால் போதுமான மனித வளங்கள் இருந்திருக்கவில்லை. அதனால் 2005ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து பெரும் மனிதவள வேட்டை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் ஆரம்பித்தது.

இந்த மனிதவள வேட்டை இந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பற்று இருந்த பல இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. வழமையாக எதிர்பார்க்கப்படும் முழுமையான தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யாமலே அவர்களால் முன்கள உத்தியோகத்தர் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதேநேரம் இடைநிலை முகாமை மற்றும் உயர்நிலை முகாமைப் பதவிகளுக்கு அனுபவமுள்ள பலர் தேவைப்பட்டார்கள்.

அந்த இடங்களை நிரப்புவதற்காக ஏற்கனவே பலகாலமாக உள்ளூர் சமூக சேவை நிறுவனங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வேலை செய்து கொண்டிருந்த பலர் இந்தச் சர்வதேச நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டார்கள். இதனால் குறித்த சர்வதேச நிறுவனங்களுக்கு பயிற்றப்பட்ட அதிகாரிகள் கிடைத்த அதேநேரத்தில் அவர்களின் உதவியுடன் கிராம மட்டங்களில் சிறந்த சேவைகளை வழங்கி வந்த  பல உள்ளூர் நிறுவனங்கள் பலவீனமடைந்தன. (இதுபற்றி தனியாக ஒரு நீண்ட பதிவை எழுத முடியும். )

இவர்களை விட, வேறு மாவட்டங்களிலிருந்தும் பலர் கடலோர மாவட்டங்களை நோக்கி தற்காலிகமாக நகரத் தொடங்கினர். சர்வதேச நிறுவனங்கள் வழங்கிய கொழுத்த சம்பளம் மற்றும் வசதிகள் இவர்களை இந்த வேலை வாய்ப்புகளை நோக்கி கவர்ந்திழுத்தது. இதனால் இலங்கை முழுவதுமே தொழிற்சந்தையில் சிறு மாற்றம் ஏற்பட்டது. சுனாமியின் பின்னரான திட்டங்களில் வேலை செய்த அனைவருக்குமே முன்னர் கிடைத்ததைவிட 100% இலிருந்து 200% சம்பள அதிகரிப்புக் கிடைத்தது. இந்தக் கவர்ச்சியான சம்பளத்தால் கவரப்பட்டு தமது அரச உத்தியோகத்தில் நீண்டகால சம்பளமற்ற விடுப்பு எடுத்துக் கொண்டு சில வெளிநாட்டு நிறுவனங்களில் தற்காலிகமாக வேலையில் இணைந்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றன.

தொழிலாளர் ஊதியத்தில் மாற்றமும் அதன் தாக்கமும்

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அதிக எண்ணிக்கையான நிறுவனங்கள் இலங்கைக்குள் பெருமளவில் நிதியை கொண்டு வந்த நிலையில் அந்த நிதியை ஒன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் செலவிட்டு முடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அதேநேரம் கட்டுமான வேலையின் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ற தொழிலாளர்களும் தேவைப்பட்டார்கள்.

இந்த சுனாமி மீள்கட்டமைப்பு வேலைத்திட்டங்களின் கீழ் Food for Work, Cash for Work என்ற இரண்டு வகையான ஊதிய முறைகள் வேறு வேறு நிறுவனங்களால் பின்பற்றப்பட்டன. இவற்றுள் Food for Work ஆரம்பத்தில் பயனுள்ளதாகத் தெரிந்தாலும் அது பின்னர் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது.

Food for Work

Food for Work திட்டத்தின் கீழ் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெவ்வேறு வேலைத்திட்டங்களில் வேலை செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஊதியமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் குடும்பத்தின் தேவையை விட அதிகமாக இருந்த அதேநேரம் அவர்களுக்குத் தேவையான மரக்கறி, மீன் போன்றவற்றை அவர்களே காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால் பல குடும்பங்கள் தமக்கு ஊதியமாக வழங்கப்பட்ட சீனி, அரிசி, மா என்பவற்றில் ஒரு பகுதியை உள்ளூர் வியாபாரிகளுக்கு கு விற்றுத் தமக்குத் தேவையான ஏனைய பொருட்களை வாங்கிக் கொண்டனர். இதனைத் தமக்குச் சாதகமாக்கிய சில வியாபாரிகள் றைந்த விலைக்கு அவர்களிடம் வாங்கி பின்னர் அவற்றைச் சந்தை விலைக்கே விற்று கொள்ளை இலாபம் பார்த்தனர். சிலர் இடங்களில் உலருணவுகள் சரியான முறையில் சேமிக்கப்படாமையால் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் இருந்தன. இதனால் பெரும் வள விரயமும் ஏற்பட்டது. சில இடங்களில் பழுதான உணவு மக்களுக்கு வழங்கப்பட்டதால் மக்களின் அதிருப்தியையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.

Cash for Work

சில நிறுவனங்கள் Food for Work முறையைப் பின்பற்றிய அதே நேரத்தில் ஏனைய நிறுவனங்கள் வழமையான முறையான Cash for Work முறையினையே பின்பற்றின. நான் முன்பு கூறியது போல குறுகிய காலத்தில் பணத்தைச் செலவிட வேண்டிய சூழலும் வீதிகள், வீடுகள் உட்பட ஏனைய கட்டிடங்களை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்த சூழலில் இந்த நிறுவனங்கள் சந்தைப் பெறுமதியை விட அதிகரித்த தொகையை நாட்சம்பளமாக வழங்க முன் வந்தன. 2005இன் ஆரம்பத்தில் 400 – 500 ரூபாவாக இருந்த சாதாரண தொழிலாளர் நாட்சம்பளம் சடுதியாக அதிகரித்து 1000 ரூபாவாகியது. சில நிறுவனங்கள் 1200 அல்லது 1500 ரூபா சம்பளம் வழங்கிய சூழலும் சில இடங்களில் இருந்தது.

இது இந்த அபிவிருத்தித் திட்டங்களில் வேலையாட்களாக இணைந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால் இதன் தாக்கம் அடுத்து வந்த ஓரிரு வருடங்களுக்கு விவசாயத் துறையில் இருந்தது. இந்தப் பகுதிகளை அண்டிய விவசாய நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை செய்த பெருநில விவசாயிகள் கூலிக்கு வேலையாட்களைப் பிடிப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒருபுறத்தில் வேலையாட்களுக்குத் தட்டுப்பாடு, மறுபுறத்தில் இரண்டிலிருந்து இரண்டரை மடங்காக அதிகரித்து விட்டிருந்த கூலியை கொடுப்பது பல விவசாயிகளுக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இவ்வாறு தினக்கூலி அடிப்படையில் வேலை வழங்கிய சந்தர்ப்பங்களிலும் சில நிறுவனங்களில் தாராளமாக ஊழல் நடைபெற்றதாக அக்காலப் பகுதிகளில் பேசப்பட்டது. எனினும் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் கூறியது போலவே நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைகளை மூடி மறைத்துத் தமது நிறுவனப் பெயர்களைக் காப்பாற்றிக் கொண்டு குற்றவாளிகளைத் தண்டனையின்றி தப்ப விட்டன.

வாடகை வீடுகளுக்கான கேள்வியும் அதன் தாக்கமும்

 சுனாமியின் பின்னர் உடனடி நிவாரண வேலைகளுக்காக கரையோர நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வந்து சேர்ந்த நிறுவன ஊழியர்களுக்கு முன்னிருந்த பெரும் சவால் தங்குமிடம். பல வீடுகளும் ஹோட்டல்களும் பயன்படுத்த முடியாதபடி சேதமடைந்த நிலையில் கடற்கரையிலிருந்து தள்ளியிருந்த வீடுகளுக்கான கேள்வி அதிகரித்து இருந்தது. அதனால் அதிக வாடகை கொடுத்துத் தங்குவதற்கு பல நிறுவனங்கள் தயாராக இருந்தன. இருந்தும் அந்தப் பகுதிகளில் பெரும் இடப் பற்றாக்குறை இருந்தது. அதனால் பலரும் கிடைத்த இடத்தில இருக்கும் வசதிகளோடு சமாளித்தபடி நிவாரண வேலையில் ஈடுபட்டனர்.

பின்னர் மீள் கட்டமைப்பு வேலைகள் தொடங்கிய நேரத்தில் சர்வதேச நிறுவனங்கள் தமது அலுவலகங்களுக்காக வசதியான வீடுகளைத் தேடின. அவற்றில் வேலை செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் தங்குவதற்கும் வசதியான வீடுகள் தேவைப்பட்டன. இதற்காக இந்த நிறுவனங்கள் பெரும்தொகைப் பணத்தை வாடகையாகத் தயாராக இருந்ததில் இந்த மாவட்டங்களில் பெரிய வீடுகளை அவர்களுக்கு வாடகைக்கு விடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் மாடியுடன் கூடிய பெரிய வீடுகளின் வாடகை இரண்டு மடங்கு அதிகரித்தது. இதன் தாக்கத்தால் சிறிய வீடுகளின் வாடகையும் 50% வரை அதிகரித்தது.

இந்த வாடகை அதிகரிப்பு வேறு மாவட்டங்களிலிருந்து வந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளுக்காக குறித்த  நகரப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்தவர்களைப் பெரிதும் பாதித்தது. பல வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் மக்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட மறுக்கும் நிலையும் ஏற்பட்டது. அவர்கள் ஒன்றில் வீட்டு உரிமையாளர்கள் கேட்ட அதிக வாடகையைக் கொடுக்க வேண்டியிருந்தது அல்லது வசதி குறைந்த சிறிய வீடுகளில் குடியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

பயனாளிகளின் முறைகேடுகள்

சுனாமியின் பின்னரான சூழலில் பெரும் தொகைப் பணம் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் சில நிறுவனங்கள் நிதியைச் செலவிடும்போது பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகள் தொடர்பில் சிறிது நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தன. இதனாலேயே அந்த நிறுவனங்களில் வேலை சில ஊழியர்கள் நிதி மோசடி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைச் செய்தார்கள் என்பதை இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மறுபுறத்தில் சில மாவட்டங்களில்  பயனாளிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள்.

சில முறைகேடுகள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றன, சிலவற்றில் அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லாதபோதும் அவர்களின் கவனக் குறைவை நேர்மையற்ற பயனாளிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். உதாரணமாக தமது படகுகளை இழந்த மீனவர்களுக்கு மீண்டும் புதிய படகுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும்போது பின்வரும் வகையிலான தவறுகள் இடம்பெற்றமை திட்ட மீளாய்வுகளின்போது கண்டறியப்பட்டன.

  1. தகுதியற்றவர்களுக்கு அல்லது உண்மையாக படகுகளை இழக்காதவர்களுக்கு படகுகள் வழங்கப்பட்டன.
  2. படகினை இழந்த மீனவர் பலர் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் படக்குக்காகப் பதிந்து இரண்டு படகுளைப் பெற்றுக் கொண்டனர்.
  3. சில முதலாளிகள் தம்மிடம் வேலை செய்யும் மீனவத் தொழிலாளி படகு வைத்திருந்ததாகப் பதிந்து அந்தப் படகுகளை முதலாளிகளே எடுத்துக் கொண்டார்கள்.

இந்தத் தவறுகளில் சில அந்தப் பிரதேச கிராம சேவகர்களில் கவனக்குறைவால் நடந்தது. சில இடங்களில் இந்த முறைகேடுகளில் அவர்களுக்கும் பங்கு இருந்தது. இலாபத்தில் அவர்களுக்கும் பங்கு கிடைத்தது. இரண்டு படகுகளைப் பெற்றுக் கொண்டவர்களை அவற்றை அந்தப் பகுதியில் இருந்த பெரிய முதலாளிகளுக்கு அவற்றைக் குறைந்த விலைக்கு விற்றார்கள் அல்லது சுனாமி பாதிக்காத கடலோரத்தில் இருந்த மீனவர்களுக்கு விற்றுக் காசை எடுத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு அதிக அளவில் உள்வந்த நிதியினால் இதனை பாதிப்புகள் ஏற்பட்டதுடன் பெரும் பணவிரயம் ஏற்பட்ட நிலையில் இன்னுமொரு முக்கிய குற்றச்சாட்டு  சில சமூக அக்கறையுள்ள நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்களால் முன் வைக்கப்பட்டது. சுனாமியின் பின்னரான நிவாரணப் பணியிலும் சரி அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மீள்கட்டமைப்புத் திட்டங்களிலும் சரி போதுமான அளவு பெண்கள் உள்வாங்கப்படவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

குறிப்பாக கருத்திட்ட ஆலோசனை, நடைமுறைப்படுத்தலுக்கான திட்டமிடல், திட்ட நடைமுறைப்படுத்தல் போன்ற படிமுறைகளில் பெண்களில் பிரச்சனைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை அறிந்துகொள்ளவும் அவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கக்கூடிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. சில கட்டமைப்புகளில் ஓரளவுக்குப்  பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவர்களின் குரல்கள் முறையாக உள்வாங்கப்படவில்லை என்பதை சில அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன. இது உண்மையிலேயே சுனாமி மீள்கட்டமைப்பு வேலைத்திட்டங்களில் இருந்த பெரும் குறைபாடுதான். (இது தொடர்பாக அறியும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த இணைப்பின் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்: https://noolaham.net/project/77/7619/7619.pdf )

 சுனாமியின் பின்னரான மீள்கட்டமைப்பு செயற்பாடுகளில் பெண்களும் சரியான முறையில் உள்வாங்கப்பட்டிருந்தால் சில பணவிரயம் குறைக்கப்பட்டிருக்கலாம், நிதி மோசடிகளையும்  குறைப்பதற்கான சூழல் அமைந்திருக்கலாம்.

குறிப்பு: மூன்று பகுதிகளாக எழுதிய ஆக்கம் சுனாமியின் பின்னர் நான் அங்கு பணிபுரிந்த காலத்தில் நேரடியாக பார்த்த, வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள், அரச அமைப்புகளில் பணிபுரிந்தவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. சுனாமியின் பின்னர் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை நிதி ஏற்படுத்திய சாதகமான, பாதகமான விளைவுகளை உங்களுடன் பகிர்வதே இதன் நோக்கம்.

நன்றி!

  • வீமன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *