பிரான்ஸின் ரியூனியன் தீவிலிருந்து 46 பேர் சிறீலங்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.
பிரான்ஸுக்குச் சொந்தமான ரியூனியன் தீவுக்கு அனுமதியின்றிச் சென்ற 46 சிறீலங்கா குடிமக்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டு ஜனவரி 14 ம் திகதியன்று விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். மீன்பிடிப் படகுகள் மூலம் மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் 13 – 53 வயதுட்பட்டவர்களாகும். அவர்களில் பெரும்பாலானோர் ஆண்களும் இரண்டு பெண்களும் என்று தெரிவிக்கப்பட்டது.
மடகாஸ்கார் தீவுக்குக் கிழக்கே மொரீசியஸுக்கு அருகேயிருக்கும் ரியூனியன் தீவு பிரான்ஸுக்குச் சொந்தமானதாகும். அதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பாகமாகவே ரியூனியன் கருதப்படுகிறது. சுமார் 2,500 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இப்பிரதேசத்தில் சுமார் 859,000 பேர் வாழ்ந்து வருகிறார்கள். நீண்ட காலமாகவே வெளியிலிருந்து எவரும் குடியேறாத இடமாக ரியூனியன் இருந்து வருகிறது.
ரியூனியனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர்கள் மூலம் அவர்களை அங்கே கொண்டுசென்றவர்கள் தலா 200,000 – 4,500,000 ரூபாய்களை அதற்கான கட்டணமாக அறவிட்டதாகத் தெரியவருகிறது. திரும்பி வந்த 43 பேரும் நாட்டின் குற்றவியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சமீப காலத்தில் சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் பெருமளவு கட்டணம் வாங்கிக்கொண்டு மனிதக் கடத்தல்காரர்கள் மீன்பிடிக்கப்பல்களில் கொண்டுசென்று இறக்கும் இடங்களில் ஒன்றாக ரியூனியன் தீவும் இருந்து வருகிறது. அங்கே சட்டபூர்வமான பத்திரங்களில்லாமல் வருபவர்களை பிரான்ஸ் திருப்பியனுப்பி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்