இரண்டு வாரங்களில் 5.4 செ.மீ புதைந்திருக்கிறது ஜோசிமாத். விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட இந்திய அரசு தடை!
சமீப வாரத்தில் சர்வதேச ஊடகங்களிலெல்லாம் பரவிவரும் செய்திகளிலொன்று இமயமலையடிவாரத்திலிருக்கும் ஜோசிமாத் நகரம் வேகமாகப் புதைந்து வருவதும், அதை நீண்டகாலமாகவே தெரிந்துகொண்டும்கூட எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவரும் அதிகாரங்கள் பற்றியுமாகும். நகரின் பல வீடுகள், ஹோட்டல்கள் உட்பட்ட வர்த்தக மையங்கள் இடிபாடுகளுடன் சரிந்திருப்பதை வெளியாகியிருக்கும் பல படங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. நிலைமை மோசமாகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். உடனடி ஆபத்து என்று கருதப்படும் நகரின் பகுதிகள் பொதுமக்களுக்கு அனுமதியின்றி மூடப்பட்டிருக்கின்றன.
இந்துத் தலமான பத்ரிநாத், சீக்கிய தலமான ஹெம்குந்த் சாஹிப், பனிச்சறுக்கல் விளையாட்டுத் தலமான ஔலி ஆகியவற்றுக்குப் போகும் வாசலில் இருக்கிறது ஜோசிமாத் நகரம். மலைப்பகுதிகளுக்கு ஆரோக்கியப் பயணம் செய்பவர்களும் ஜோசிமாத்திலிருந்து தமது சிலிர்ப்பூட்டும் நடவடிக்கைகளைத் தொடங்குவதுண்டு. எனவே அந்த நகரம் ஆன்மீக யாத்தீகர்களிடம் மட்டுமன்றி பொழுதுபோக்கு, விளையாட்டு சுற்றுப்பயணிகளிடமும் பிரபலமானது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் [Indian Space Research Organisation (ISRO)] தனது செயற்கைக்கோள்கள் மூலம் எடுத்த படங்கள், புள்ளிவிபரங்களை வைத்து ஆராய்ந்ததில் டிசம்பர் 27 – ஜனவரி 08 திகதிகளுக்கிடையில் மட்டும் ஜோசிமாத் நகரம் சுமார் 5.4 செ.மீ நிலத்துக்குக்கீழ் புதைந்திருக்கிறது. குறிப்பிட்ட விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டு, ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் பரவி நிலைமையின் தீவிரத்தை விஞ்ஞானபூர்வமாகவும் காட்டின. இந்திய அரசு அவ்விபரங்கள் வெளியாகியதும் உடனடியாக எடுத்த நடவடிக்கை Indian ISRO
இனிமேல் அவர்கள் அப்படியான விபரங்களை பொதுமக்களுக்கு வெளியிடலாகாது என்று வாய்ப்பூட்டுப் போட்டதாகும். வெளியிடப்பட்ட படங்களும் அந்த மையத்தின் இணையத்தளங்களிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஜூலை 2020 – மார்ச் 2022 க்கு இடைவெளியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் நடத்திய ஆய்விலிருந்து, ஜோசிமாத் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் ஆண்டுக்கு 6.5 சென்டிமீட்டர் (2.5 அங்குலம்) என்ற விகிதத்தில் புதைந்து வருகின்றன. அவர்களின் கண்டுபிடிப்புகள் இமயமலைப் பகுதியில் உள்ள ஜோசிமாத், அதைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு மட்டுமல்ல, இதேபோன்ற நிலப்பரப்பைக் கொண்ட எதிர்காலத்தில் மூழ்கும் அபாயத்தைக் கொண்ட நகரங்களுக்கும் உதவக்கூடும்.
ஜோசிமாத்தில் நடந்துவரும் நிலப்பரப்பு புதைதல் அந்த இடத்துக்கு மட்டும் தனித்தன்மையானதல்ல, அதேபோன்று பனிபடர்ந்த மலைப்பகுதிகள், நதிகள், மலைகள் செறிவாக உள்ள இடங்களெல்லாவற்றுக்கும் பொதுவானது என்று சுற்றுப்புற சூழல், காலநிலை பேணல் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள். பூமி வெப்பமடையும் வேகத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் நாடுகள் மும்முரமாக ஈடுபடாத பட்சத்தில் இதேபோன்ற இயற்கைச் சீற்றங்களையும், அதன் விளைவுகளையும் மனிதர்கள் மென்மேலும் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்