மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு..!

உலகில் பல பகுதிகளில் மழையும் சில பகுதிகளில் வெயிலும் மாறி மாறி தமது தாக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந் நிலையில் தான் அதிகளவான வறட்சியின் காரணமாக பல் வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் இலங்கையில் மின்சார துறையில் பெரும் பகுதியை நீர்மின்சாரம் பங்கு வகிக்கிறது.வறட்சியான காலநிலை ஏற்பட்டதன் காரணமாக இலங்கை நீர் பாசன திணைக்களத்திற்கு சொந்தமான 63 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சத வீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மகாவலி அதிகார சபையின் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவும் 35 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்மலை, விக்டோரியா, ரன்தெனிகல, மவுசாகலை போன்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை சில நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளமையினால், வரட்சியான காலநிலை தொடருமானால் நீர்மின் உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்படலாம் என மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிலாந்த தனபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடவலவ நீர்த்தேக்கத்திலிருந்து நெற்பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி எம்பிலிப்பிட்டிய நகர விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

அத்துடன் வறட்சி காரணமாக சமனலவௌ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சமனலவௌ நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் விடப்பட்டால் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களில்
சுமார் 04 மணித்தியால மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்காலத்தில் மழைவீழ்ச்சி மேலும் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *