இந்துக்களின் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற யாழ் இந்துக்கல்லூரி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.


யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில்  இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. 

யாழ் இந்துக்கல்லூரி அணி வீரர்களின் அபார பந்துவீச்சில் கொழும்பு இந்துக்கல்லூரி அணி தடுமாறித்தோல்வி கண்டது.

முதல் இனிங்க்ஸ்க்காக முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி  சகல விக்கெட்களையும் விரைவாகவே இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சிறிதளவு நின்று நிலைத்தாடி அபிஷேக் 14 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்ரீ நிதுஷான் 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தாலும் அவர்களையும் விரைவாக யாழ் இந்து அணி ஆட்டமிழக்கச் செய்தது.
பந்துவீச்சில் சுபர்ணன் 20 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹரிஹரன் 36ஓட்டங்களைக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சாருஜன் 3 ஓட்டங்களைக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி இரண்டாம் நாள் காலை வரை ஆட்டத்தைத் தொடர்ந்து,  8 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

ஆட்டத்தில் பரேஷித் 46 ஓட்டங்களையும், பவானன் 26 ஓட்டங்களையும், பிரேமிகன் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும்,சுபர்ணன் 31 ஓட்டங்களையும், வை. சாருஜன் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

160 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி, 32 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்கயை மாத்திரம் எடுத்து இனிங்க்ஸ் தோல்வியைத் தழுவியது.

யாழ். இந்துக் கல்லூரிக்காக மீண்டும் பந்துவீச்சில் அசத்திய சுபர்ணன் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், தரணிசன் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஹரிஹரன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி யாழ் இந்துவை வெற்றியின் பக்கம் அழைத்துச்சென்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக யாழ் இந்துவின் சுபர்ணன் தெரிவுசெய்யப்பட்டார்.
மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ் இந்துக்கல்லூரிக்காக 46 ஓட்டங்களை குவித்த  பரேஷித் தெரிவுசெய்யப்பட, சிறந்த பந்துவீச்சாளராக யாழ் இந்து அணிக்காக 5 விக்கெட்டுக்களை எடுத்த தரணிசன் தெரிவுசெய்யப்பட்டார். அதே போல சிறந்த களத்தடுப்பாளராக யாழ் இந்துவின் பிரேமிகன் தெரிவானார்.


13 வது இந்துக்களின் பெருஞ்சமரில் வெற்றிபெற்ற யாழ் இந்து அணி , இதுவரை நடைபெற்ற போட்டிகளின் வெற்றியை 3-3 என்ற ரீதியில் சமன் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *