வியாழன்று முதல் இஸ்ராயேல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைக் கொடுக்கவிருக்கிறது.
ஜூலை மாதக் கடைசியிலிருந்து இஸ்ராயேலின் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. உலகின் முதல் நாடாகத் தடுப்பு மருந்துகளை பெரும்பாலான தனது குடிமக்களுக்குக் கொடுத்த இஸ்ராயேல் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளையே பாவித்து வருகிறது.
அதே தடுப்பு மருந்தைத் மூன்றாவது ஊசியாகத் தனது நாட்டின் பெரும்பான்மையான 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கும் இஸ்ராயேல் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதையடுத்து 26 ம் திகதி வியாழனன்று அவற்றை 40 வயதுக்கதிகமானவர்கள் மற்றும் அவ்வயதுக்குக் குறைந்தவராக இருப்பினும் கர்ப்பிணிகளுக்கும், ஆசிரியர்கள், மருத்துவ சேவையாளர்களுக்கும் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
கொரோனாத்தொற்றுக்கள் பெருமளவில் அற்றுப்போயிருந்த இஸ்ராயேலில் சமீப காலத்தில் டெல்டா திரிபு பரவி வருகிறது. அதனால் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் + 60 வயதானவர்களே என்று புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவருகிறது. ஏற்கனவே இரண்டு தடுப்பூசி பெற்றிருந்தவர்களின் கொரோனா – எதிர்ப்புச் சக்தி காலப்போக்கில் குறைவதாலேயே மூன்றாவது தடுப்பூசியைக் கொடுக்க ஆரம்பித்தது இஸ்ராயேல்.
சாள்ஸ் ஜெ. போமன்