காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் மருந்தாக மீண்டும் உலக அரங்குக்கு வருகின்றன அணுமின்சார உலைகள்.
ஒரு காலத்தில் உலகின் எரிசக்தித் தேவையை மலிவாகப் பூர்த்திசெய்யக்கூடியது என்று கருதப்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் அணுமின்சார உலைகள் உண்டாக்கப்பட்டன. அவைகளில் பல தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன. செர்னோபில் அணுமின்சார நிலைய விபத்தானது அவற்றைச் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்தானவை என்று அறியவைத்தது. அதையடுத்த புகுஷிமா அணுமின்சார உலை விபத்தும் அதையே உறுதிசெய்தது.
அணுமின்சார நிலையங்கள் உலகின் பல நாடுகளில் மூடப்பட்டன, மூடப்படும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகளில் அந்த நடத்தை ஒரு அரசியல் கோட்பாடாகவும் உருவெடுத்து வளர்ந்து வந்திருக்கிறது.
உலகின் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுத்து நிறுத்துவது அவசரம் என்ற நிலை உருவாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதே அணுமின்சார உலைகள் ஆபத்பாந்தவன் என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டுக்கு
முன்னர் அணுமின்சார உலைகளை நிறுவுவதை ஒரு காலநிலை பேணும் திட்டமாக மாற்றலாம் என்று பலரும் பிரேரிக்க ஆரம்பித்திருந்தார்கள். உலகின் அணு நிலையங்களைக் கண்காணிக்கும் ஐ.நா-வின் தலைமையும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
“உலகின் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அணுச்சக்தியை ஒதுக்கி வைக்கச் சாத்தியமில்லை. கருத்து நிலைபாடு மாறிக்கொண்டிருக்கிறது. உலகில் ஏற்கனவே பாவிக்கப்படும் கரியமிலவாயு வெளியேற்றாத சுத்தமான எரிசக்தியில் கால் பகுதி அணுமின்சார உலைகளிலிருந்தே வருகின்றன,” என்கிறார் ரபாயேல் மரியானோ குரொஸ்ஸி, சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைமை நிர்வாகி.
கால நிலை மாற்றத்துக்குத் தடைபோடுவதானால் அதிவேகமாக, அதிமுக்கியமாகச் செய்யவேண்டியது கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைப்பதே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
2015 இல் பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில் கிஞ்சித்துமே சிந்திக்கப்படாத விடயமாக இருந்த அணுமின்சார உலைகள் என்ற விடயம் கிளாஸ்கோவில் மெல்லிய குரலில் பேசப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் முக்கிய அரசியல் கட்சிகள் சில ஒரு படி மேலே போய், “அணுமின்சார உலைகள் சுத்தமான எரிசக்தி” என்று பிரசாரிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்