“நிலக்கரியை வாங்க யாராவது இருக்கும்வரை நாம் விற்பனை செய்வோம்!” ஆஸ்ரேலியா.

எரிபொருளுக்காக நிலக்கரியில் தங்கியிருக்கும் உலகின் முன்னணி நாடுகள் 40 கிளாஸ்கோவின் காலநிலை மாநாட்டில் தாம் அவற்றைப் பாவிப்பதைப் படிப்படியாக நிறுத்துவதாக உறுதிசெய்துகொண்டன. அவைகளில் பெரும்பாலானவை பொருளாதார ரீதியில் வசதியானவை அல்ல. அவைகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார பலமுள்ள, சுபீட்சமடைந்த நாடான ஆஸ்ரேலியா தனது நிலக்கரிப் பாவிப்பையோ, விற்பனையையோ நிறுத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டது சர்வதேச அளவில் விமர்சிக்கப்படுகிறது.

போலந்து, இந்தோனேசியா, தென் கொரியா, வியட்நாம், உக்ரேன் ஆகிய நாடுகள் நிலக்கரியைப் பாவிப்பதை நிறுத்துவதாக வாக்குக்கொடுத்த நிலக்கரியில் தங்கியிருக்கும் முக்கிய நாடுகளாகும்.

ஆனால், உலகில் நிலக்கரி பாவிப்பதில் முதலிடத்திலிருக்கும் மூன்று நாடுகளான சீனா, ஆஸ்ரேலியா, அமெரிக்கா அத்தகைய உறுதிமொழியைக் கொடுக்கவில்லை. நிலக்கரியால் இயக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு உதவுவதை நிறுத்துவதாக அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. சீனா, ஆஸ்ரேலியா ஆகியவை அதையும் செய்யவில்லை.

உலகக் காலநிலை மாற்றங்களினால் சமீப வருடங்களில் பாதிக்கப்பட்டுவரும் முக்கிய நாடுகளில் ஆஸ்ரேலியா ஒன்றாகும். வழக்கத்துக்கு மாறான கடும் வரட்சியும், காட்டுத்தீயும் ஆஸ்ரேலியாவின் வெவ்வேறு பாகங்களில் கடுமையாகத் தாக்கி வருகின்றது. 

“இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் நிலக்கரியை விட ஆஸ்ரேலியாவின் நிலக்கரியே உலகில் பாவிக்கப்படவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அது ஆஸ்ரேலியாவின் பொருளாதாரத்தை வளர்த்து, எம் நாட்டவருக்கு வேலைவாய்ப்புக்களைக் கொடுக்கவேண்டும். எனவே, அவைக்கான தேவை உலகில் இருக்கும்வரை நாம் அதை விற்போம்,” என்று குறிப்பிடுகிறார் ஆஸ்ரேலியாவின் இயற்கை வள அமைச்சர் கீத் பிட் [Keith Pitt].

 கரியமிலவாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகள், நிலக்கரிப் பாவிப்பு ஆகியவையைக் கணக்கிட்டால் ஆஸ்ரேலியக் குடிமகக்கள் ஒவ்வொருவரும் கரியமிலவாயு வெளியேற்றும் உலக நாட்டு மக்களில் நாலாவது இடத்தைப் பெறுகிறார்கள். சவூதி, அமெரிக்கா, கண்டா ஆகிய நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவரும் ஆஸ்ரேலியருக்கு முன்னாலிருப்பவர்களாகும். 

சுமார் 300,000 பேர் ஆஸ்ரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம், நிலக்கரி எரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புள்ள தொழிலில் வாழ்கிறார்கள்.

ஆஸ்ரேலிய அரசியல்வாதிகள் நாட்டில் கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைப்பதில் அலட்சியமாக இருப்பினும் மக்கள் அதற்கு எதிராகவே இருக்கிறார்கள். இவ்வருட நடுப்பகுதியில் ஆஸ்ரேலியாவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி 70 விகிதமானோர் தமது நாடு காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென்கிறார்கள். அப்படியான நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதித்தாலும் அவற்றை எடுக்கவேண்டுமென்று 60 விகிதமானோர் விரும்புகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்