அணுமின்சார உலைகளைக் கட்டும் வியாபாரத்தில் இறங்குகிறது ரோல்ஸ் ரோய்ஸ்.

தமது தொழிற்சாலையிலேயே பெரும்பகுதியைத் தயார்செய்து எடுத்துச் சென்று தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய சிறிய அளவிலான அணுமின்சாரத் தயாரிப்பு மையங்களை விற்கப் போவதாக பிரிட்டிஷ் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெரிய அளவிலான அணுமின்சார நிலையங்களைக் கட்டுவதை விடத் தாம் மாதிரியமைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் [Small Modular Reactor] மிகவும் மலிவானவை, நிறுவுவதற்கு இலகுவானவை என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

2050 இல் தமது நாடு கரியமிலவாயு வெளியேற்றலைச் சமப்படுத்திவிடும் என்று சூழுரைத்திருக்கும் ஐக்கிய ராச்சியம் அந்தக் குறியை அடைய அணுமின்சார நிலையங்களை நிறுவவிருப்பதாக அறிவித்திருந்தது. அந்தக் குறிக்கோளை நாடு அடைவதற்காகத் தாம் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படுத்தியிருக்கும் வெற்றியே அந்த அணுமின்சார நிலையங்கள் என்கிறது ரோல்ஸ் ரோய்ஸ்.

தமது புதிய திட்டத்துக்காக இன்னொரு நிறுவனத்துடன் சேர்ந்து சுமார் 200 மில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்யவிருப்பதாகக் கூறும் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்துக்கு அதேயளவு உதவித் தொகையை நாட்டின் அரசும் கொடுக்கும். அவைகளின் மூலம் சுமார் 40,000 வேலைவாய்ப்புக்களை 2050 ம் ஆண்டுவரை உருவாக்கலாம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.

ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார் எரிசக்தி அமைச்சர் கிவாசி கிவார்ட்டெங். சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்புக்களோ ஐக்கிய ராச்சியத்தின் முடிவை விமர்சித்திருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்