பச்சைக் குழந்தைகளுக்கு மக்கள் மன்றத்தில் இடமில்லையென்றது பிரிட்டிஷ் பாராளுமன்றம்.
தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரீஸிக்குப் பாராளுமன்ற நிர்வாகக் குழு அனுப்பியிருந்த கடிதத்தில் அவர் தனது மூன்று மாதக் குழந்தையை இனிமேல் பாராளுமன்றம் நடக்கும் சமயத்தில் அங்கே கொண்டுவரலாகாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.
பெண்களின் நுழைவு அரசியலுக்குள் சாதாரணமாகி வருகிறது. சில நாடுகளில் பெண் பிரதமர்களே பாராளுமன்றத்துக்குத் தமது குழந்தைகளுடன் சென்று பணியாற்றுகிறார்கள். ஐஸ்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் தனது கைக்குழந்தைக்குப் பால்கொடுத்தபடியே உரையாற்றியும் இருக்கிறார்.
ஸ்டெல்லா கிரீஸி ஏற்கனவே தனது முதல் மகளை, கைக்குழந்தையுடன் பாராளுமன்றத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் எழாத அக்கேள்வி தற்போது எழுந்திருப்பது அவருக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. இப்படியான தடைகள் பாராளுமன்றத்தை ஒரு குடும்பத்துக்கு இதமான இடமாக்குவதுக்கு இடக்காக இருக்கின்றன என்கிறார்.
செப்டம்பர் மாதத்திலிருந்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தினுள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்கிறது அதன் நிர்வாகக் குழு. உப பிரதமர் டொமினிக் ராப், கிரீஸியின் கருத்தைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது எனினும் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய சட்டங்கள் அதன் நிர்வாகக் குழுவால் எடுக்கப்படுகின்றன என்று தட்டிக் கழித்துவிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்