சுவீடனில், அரசியலில் சரித்திரத்தை எழுதி ஏழே மணி நேரத்தில் அழித்தும் விட்டார்கள்.

பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து நூறு ஆண்டுகாலமாகியும் நாட்டை ஆளும் பொறுப்பை ஒரு பெண் அடையும் நிலைமை உண்டாகவில்லையே என்ற ஆதங்கம் சுவீடன் மக்களுக்கு உண்டு. அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் புதனன்று பாராளுமன்றத்தில் சோஷியல் டெமொகிரடிக் கட்சியின் தலைவரான மக்டலேனா ஆண்டசனைப் பிரதமராக ஏற்றுக்கொண்டார்கள்.

சுவீடன் சோஷியல் டெமொகிரடிக் கட்சியின் அரசில் பல வருடங்களாக பொருளாதார அமைச்சர் பதவியில் இருந்தவர் மக்டலேனா. சுமார் ஒரு வாரத்தின் முன்னர் தான் அவர் அக்கட்சியின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார். அதுவரை பிரதமராகவும், கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டீபன் லொவேன் தான் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததால் மக்டலேனாவை அப்பதவிக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.

சுவீடன் பாராளுமன்றத்தில் லொவேன் அரசு மேலும் மூன்று கட்சிகளின் மிண்டுகொடுப்பினாலேயே ஒரு வாக்கு அதிகப் பெரும்பான்மையில் ஆட்சியிலிருந்தது. ஆதரவுக் கட்சிகளில் எந்த ஒன்றாவது, இன்னொன்றுடன் முரண்டுபிடித்தாலேயே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலையே கடந்த தேர்தலுக்குப் பின்னர் நிலவிவருகிறது. அவர்களெல்லோரையும் சமப்படுத்தி ஆட்சியை நடத்திவந்த லொவோன் பதவியிலிருந்து விலகியதுமே புதிய பிரதமராக மக்டலேனாவை ஏற்றுக்கொள்ள தத்தமக்கு என்ன வேண்டுமென்று மிண்டு கொடுக்கும் கட்சிகள் பட்டியலிட்டார்கள்.

பிரதமராகப் பாராளுமன்றத்தில் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மிண்டு கொடுக்கும் கட்சிகளுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரேயே அவர்கள் மக்டலேனாவைப் பிரதமராக அனுமதித்தார்கள்.

பிரதமராகியதும் அவர் புதிய நிதியாண்டின் வரவுசெலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு ஆதரவு கேட்டார். மற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் தமது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து வாக்குக்கேட்டன. 

மிண்டுகொடுத்த கட்சிகளில் ஒன்று மக்டலேனாவைப் பிரதமராக அனுமதித்துவிட்டு எதிர்க்கட்சிக் கூட்டணியின் வரவுசெலவுத் திட்டத்துக்கு வாக்களித்தது. எதிர்க்கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமராகச் செயற்படவும் மக்டலேனா தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஷோஷியல் டெமொகிரடிக் கட்சியின் அரசில் மந்திரிப் பதவியுடன் இருந்த இன்னொரு ஆதரவுக் கட்சியான பசுமைக் கட்சியோ எதிர்க்கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தில் சூழலை மாசுபடுத்தும் திட்டங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டித் தாம் அரசாங்கத்திலிருந்து விலகின. விளைவாக, மக்டலேனாவின் அரசாங்கத்துக்கு ஆதரவும் இல்லாமல் போகவே அவர் தனது பதவி விலகலைப் பாராளுமன்றத்தின் சபாநாயகரிடம் கையளித்தார்.

மக்டலேனாவின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக சபாநாயகர் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரைப் பிரதமராகப் பதவியேற்க அழைக்கக்கூடும். ஆனால், தற்போதைய பாராளுமன்ற நிலையில் எவரையும் பிரதமராக அனுமதிக்கப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்போவதில்லை. 

மக்டலேனா தான் தனது கட்சியின் அறுதிப் பெரும்பான்மையுடனேயே மீண்டும் பிரதமராகுவேன் என்று சூழுரைத்திருக்கிறார். ஆனால், சுவீடனில் கடந்த கால் நூற்றண்டாக அக்கட்சி சுமார் 30 விகித வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றதில்லை. அடுத்த தேர்தலுக்கு மேலும் 10 மாதங்களே மிச்சமிருக்கின்றன. இந்த நிலையில் சபாநாயகர் ஓய்வுபெற்றுச் சென்ற லொவேனையே தற்காலிக அரசொன்றை அமைக்க அழைக்கக்கூடும் என்று சிலர் கணிக்கிறார்கள்.

ஒரே நாளில் பெண்ணொருவர் பிரதமராகிச் சரித்திரம் படைத்ததுடன், அதே நாளில் மிகக்குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் என்ற  பெயரையும் மக்டலேனா ஆண்டர்சனே பெறுகிறார்.  

சாள்ஸ் ஜெ. போமன்