நகல் வாழ்வு
சந்திக்கும் யாவரிடமும் நலமாயிருப்பதாய் சொல்வதில் தொடங்கி விடுகிறது
நம் நகல் வாழ்வு
பொருந்தா புன்னகை உடுத்தி உண்மை கசங்க பயணப்படுகிறோம்
காரியமாக துதி பாடி
உதவாக்கரைகளை உயர்வென்று பேசி
ஒன்றுமிலாதவற்றை சிலாகித்து
நம் இருப்பையும் வெளிப்படுத்திக்கொள்ள யத்தனிக்கிறோம்
நாகரிக வரையறை வளையத்திற்குள் உள்நுழைத்து
கண்ணெதிர் கயமைகளையும் கடந்து சேறற்ற வாழ்வென சிலாகிக்கிறோம்
உள்வன்மங்கள் வெளித் தெரிந்திடாவண்ணம் யோக்கியசீலனென மார்தட்டிக் கொள்ளும் மலிந்த மகிழ்வு
நமக்கும் முதுகுண்டென்பதை யோசிக்கவும் மறந்து பிறனழுக்கை படையலிடுகிற கீழ்நிலைச் சிந்தை
பிடித்தவைகள் துறந்து பழக்கப்படுத்தப்பட்டவைகளுக்கு உயிர் கொடுத்து
கூட்டத்தில் ஒருவராகிறோம்
அத்தி பூத்ததென மலரும் மனிதங்களுக்கும்
திடீர் புரட்சிகளுக்கும்
சில நேர பரிதாபங்களுக்கும் நம்மை தயார்படுத்தி வெளிப்பார்வைக்கு முழுமனிதனாகத் திரிகிறோம்
வெட்கமில்லா வேஷத்தோடு உலாப்போகிற நம் யாவரிடத்தும் எப்போதேனும் எங்கேயேனும் அழுத்தமாய் அறைந்து தான் செல்கிறது
நாம் தவறவிட்ட மெய்வாழ்வு
சீனி.தனஞ்செழியன்