அமெரிக்காவும், நாட்டோவும் சேர்ந்து ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு மறுப்புப் பதிலளித்திருக்கிறார்கள்.
சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக ஏற்பட்டிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா, நாட்டோ அமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு எல்லை சம்பந்தப்பட்ட சர்ச்சையில் ரஷ்யாவின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யா எழுத்தில் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு அமெரிக்காவும், நாட்டோ அமைப்பும் சேர்ந்து மறுப்பாகவே பதிலளித்திருக்கின்றன.
தாம் எந்தெந்த நாடுகளுடன், அணிகளுடன் கூட்டுச் சேர்ந்துகொள்வது என்பதை முடிவுகளை எடுப்பது அந்தந்த நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்ட முடிவாகும், என்பதே ரஷ்யாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதிலாகும்.
“மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகளை ஒருவரொருவருடன் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையே நாட்டோ அமைப்பும், அமெரிக்காவும் திட்டவட்டமாக நம்புகின்றன. அவைகளுக்காகப் போரில் ஈடுபடுவது சரியல்ல,” என்பதே எங்கள் கோட்பாடு என்று நாட்டோவின் பொதுக் காரியதரிசி யென்ஸ் ஸ்டோல்ட்டன்பெர்க் அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றில் குறிப்பிட்டார். ரஷ்யா முன்வைத்தபடி நாட்டோ அமைப்புக்குப் புதிய நாடுகளைச் சேர்த்துக்கொள்ளலாகாது என்பதைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
நாட்டோ அமைப்புடனான ராஜதந்திர உறவுகளை ரஷ்யா துண்டித்திருப்பதற்கு அவர் கவலை தெரிவித்தார். அதிலிருந்து ரஷ்யா மாறினால் பேச்சுவார்த்தைகளுக்கு வழிபிறக்கும் என்று குறிப்பிட்ட அவர் மோல்டாவியா, உக்ரேன், ஜோர்ஜியா ஆகிய நாடுகளின் பிராந்தியங்களில் அந்த நாடுகளின் அனுமதியின்றி ரஷ்யாவின் இராணுவம் நுழைந்திருப்பதைக் கண்டித்தார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன், “நாங்கள் கோட்பாட்டு ரீதியாக உக்ரேன் அரசின் இறையாண்மையை மதிக்கிறோம். அந்தந்த நாடுகள் தாம் விரும்பும் நாடுகளுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளவும், அணிகளுடன் சேரவும் எவரின் அனுமதியும் தேவையில்லை,” என்று தெரிவித்தார். ரஷ்யாவின் கோரிக்கையான, ‘ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் நாட்டோ இராணுவம் திருப்பியழைக்கப்படவேண்டும்’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிளிங்கன் தெரிவித்தார்.
அண்டனி பிளிங்கனும், ரஷ்யாவின் செர்கேய் லவ்ரோவும் விரைவில் மீண்டும் சந்தித்து அமெரிக்க-நாட்டோ கூட்டுப் பதிலைப் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்