இஸ்லாமியச் சிறுமிகள் பாடசாலை நடத்தி மாணவிகளை வன்புணர்வு செய்துவந்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை.
36 வயதான ஹெரி விரவன் இந்தோனேசியாவில் சிறுமிகளுக்கான பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சுமார் ஐந்து வருடங்களாக 13 மாணவிகளைக் கற்பழித்து அவர்களில் சிலரைக் கர்ப்பிணிகளாக்கியதற்காகவே ஹெரி விரவனுக்கு அச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது பாடசாலையில் தங்கிப் படித்துவந்த சிறுமிகளில் 11 – 14 வயதான அந்த மாணவிகளைப் பாடசாலையில் மட்டுமன்றி ஹோட்டல்கள், வாடகை அறைகளுக்குக் கூட்டிச்சென்று கற்பழித்து வந்த ஹெரி விரவனை வெளிப்படுத்தப் பலரும் நீண்ட காலம் பயந்திருந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அக்கற்பழிப்புக்களின் விளைவால் ஒன்பது குழந்தைகள் பிறந்திருந்தது தெரியவந்து அது இந்தோனேசியாவையே அதிரவைத்தது.
அதையடுத்து ஜனாதிபதி ஜுக்கோ விடோடோ நாட்டிலிருக்கும் இஸ்லாமியப் பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளின் நிலைமை பற்றி விசனம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர் வன்புணர்வு பற்றிய சட்டங்களைப் பாராளுமன்றம் மறுபரிசீலனை செய்து கடுமையாக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதையடுத்து நாட்டின் பழமைவாதிகள் ஓரினச்செயற்கை, திருமணத்துக்கு வெளியே உறவு போன்றவைகளைக் குற்றமாக்குவதும் அதே சட்டத்தில் இணைக்கப்படவேண்டும் என்று குரலெழுப்பியிருக்கிறார்கள்.
பெப்ரவரி நடுப்பக்குதியில் ஹெரி விரவனுக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதுடன் விதையடி செய்து சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் தீர்ப்பிட்டிருந்தது. அத்தீர்ப்பையடுத்து அரச வழக்கறிஞர் ஹெரி விரவனின் குற்றம் மிகவும் பாரதூரமானது என்று குறிப்பிட்டு அதை மேன்முறையீடு செய்திருந்தார்.
“இஸ்லாமியப் பாடசாலைகளின் பெயருக்கே விரவன் நடவடிக்கை களங்கமானது. அவரது செயல் பல பெற்றோர்கள், பிள்ளைகளின் வாழ்வையே அழித்திருக்கிறது,” என்று குறிப்பிட்ட பண்டுங் உயர்நீதிமன்ற நீதிபதி மரண தண்டனையை அறிவித்தார்.
வன்புணர்வால் பிறந்த ஒன்பது குழந்தைகளையும் பெண்கள், பாலர் பேணும் அதிகாரம் பொறுப்பெடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் மனோநிலைமை சீராகிய பின்னரே அக்குழந்தைகளை அப்பெண்களிடம் ஒப்படைகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்