உக்ரேன் அரசு கணித்தபடியே கிழக்குப் பகுதியைத் தாக்குகிறது ரஷ்ய இராணுவம்.
கியவ் நகரை நெருங்கி அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தாக்கிவந்த ரஷ்ய இராணுவம் தனது முயற்சிகளில் தோல்வியடைந்து அங்கிருந்து விலகியது. அதையடுத்து ரஷ்யா உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இருக்கும் டொம்பாஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தத் தனது இராணுவத்தை ஒன்றுபடுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.உக்ரேன் உளவுத்துறையின் அவ்விபரங்களை நாட்டோ, அமெரிக்கா ஆகியவையின் கண்காணிப்புகளும் உறுதிப்படுத்தியிருந்தன.
அதையடுத்து நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியிலிருக்கும் நகர்களில் வாழும் சாதாரண மக்களை வெளியேறிப் பாதுகாப்பான மேற்குப் பகுதிக்குப் போகும்படி உக்ரேன் அரசு வேண்டிக்கொண்டிருந்தது. ரஷ்யத் தாக்குதல்களை உக்ரேன் இராணுவம் எதிர்கொள்ள போரில் ஈடுபடாதவர்கள் அங்கிருந்து வெளியேறினால் நல்லது என்று உக்ரேன் அரசு வேண்டிக்கொண்டது. அதற்காக சுமார் 10 பாதுகாப்பான தப்பும் வழிகளையும் உக்ரேன் இராணுவம் ஒழுங்குசெய்து அதைப் பொதுமக்களுக்குத் தெரிவித்து வந்தது.
பாதுகாப்பான வழிகளில் சாதாரண மக்களையும், பலவீனமானவர்களையும் வெளியேற்றி வரும் அதே சமயம் ரஷ்ய இராணுவம் டொம்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதியான டொனெட்ஸ்க்கில் இருக்கும் கிரெமடொஸ்க் என்ற நகரின் ரயில் நிலையத்தை ஏவுகணைக் குண்டால் தாக்கியிருக்கிறது. அந்த நகரிலிருந்த சுமார் 1,000 பேரை வெளியேற்றுவதில் உக்ரேன் அதிகாரிகள் ஈடுபட்டு வரும்போது இத்தாக்குதல் நடந்திருக்கிறது.
கிரெமடொஸ்க் நகர ரயில் நிலையத்தில் சுமார் 1,000 பேர் பாதுகாப்பாகக் குவிந்திருக்கிறார்கள். அச்சமயத்தில் நடந்த தாக்குதலில் 30 பேருக்குக் குறையாமல் இறந்திருப்பதாகப் பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தவிர 100 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்