உடன்பிறப்பின் உன்னதம்
தொப்புள் தொடர்பென்று பிறந்தோம்
தொட்டில் உறவென்று மலர்ந்தோம்
உப்புடன் ஒற்றுமையும் பிசைந்து
உணவென ஊட்டப்பட வளர்ந்தோம்
அன்பை அறமென்றார் அன்னை
அன்னம் வழங்கென்றார் தந்தை
பண்பு இவையென்று புகட்டி
பதிய மனதிலாழ்ந்து பயின்றோம்
அறிவுடன் ஆற்றலையும் சேர்த்து
அன்பும் அடக்கமுடன் இணைத்து
நெறியுடன் ஒழுக்கத்தை கூட்டி
நேர்மை நிறைந்தவரென திகழ்ந்தோம்
கொல்லை பயிருணவென உண்டு
கொய்யா மரத்திலூஞ்சல் கட்டி
பல்லாங் குழிப்பூப்பந் தாடி
பள்ளி பருவமழகாய் கடந்தோம்
படிப்பில் நற்றிறமுடை மக்களாய்
பாட்டியின் அணைப்பில்வளர் செல்லமாய்
விடுப்பில் மாமனில்லம் செல்வதை
வெளியூர் பெரும்பயணமாய் நினைத்தோம்
தொழிலது கரணியமென இருப்பினும்
துணையது இணைந்தமையென இருப்பினும்
வழியில் திக்கொன்றென பிரியினும்
வழுவா குடும்பமென்று உயர்ந்தோம்
கருவில் மகவென்று உறைந்ததால்
குருதி உறவென்று பகிர்ந்ததால்
கருத்தில் விரிசலின்றி இருந்ததால்
கலந்து ஒன்றிணைந்து செழித்தோம்
உடம்பில் துடிக்குமுயிர் தன்னில்
உணர்வில் அன்புகலந் தமையால்
உடலில் செந்நீருள வரையில்
உடன் பிறந்த பற்றிதை காப்போம்
எழுதுவது :
அகிலா பொன்னுசாமி,
சபா, மலேசியா.