ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாதுகாப்புச் செலவைத் தமது நாட்டில் உயர்த்த விரும்பாதவர்கள் இத்தாலியர்கள்.
ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலெல்லாம் பாதுகாப்புக்கான செலவு கணிசமான அளவு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை எந்த நாடுகளிலும் அப்படியான பாதுகாப்புச் செலவு உயர்த்தப்பட்டதை மக்கள் எதிர்க்கவில்லை, இன்னும் அதிகமாக உயர்த்தவில்லையே அல்லது வேகமாக அச்செலவுகளை ஏன் உயர்த்தவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாறாக, இத்தாலியர்களோ தமது அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் பாதுபாப்புச் செலவு உயர்த்தலை விரும்பவில்லை.
இத்தாலியின் பிரதமர் மாரியோ டிராகி நாட்டின் இராணுவப் பாதுகாப்புக்கான செலவை நாட்டின் வருடாந்தர உற்பத்தியின் 2 % வரை உயர்த்தவிருப்பதாகச் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். அந்தச் செலவு அதிகரிப்பைப் படிப்படியாக 2028 ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதே பிரதமரின் உத்தேசமாகும்.
எந்தக் கட்சிக்கும், கட்சிகளின் கூட்டணிக்கும் பாராளுமன்றப் பெரும்பான்மை கிடையாததால் துறைசார்ந்த திறமைசாலியாக வெளியேயிருந்து கொண்டுவரப்பட்டுப் பிரதமராக இருப்பவர் மாரியோ டிராகி.
பிரதமர் டிராகியின் இராணுவப் பாதுகாப்புச் செலவு உயர்த்தலுக்கு ஆதரவளிப்பவர்கள் 40 % க்கும் குறைவானவர்களே. அதேபோலவே பாராளுமன்றத்திலும் அதற்கான பெரும்பான்மை ஆதரவு இல்லை. பிளவுபட்டிருக்கும் கட்சிகளின் பெரும்பாலான அங்கத்தினர்கள் தாம் பிரதமரின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதைத் தவிர பிரதமரின் எண்ணத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருப்பவர்களிலொருவர் பாப்பரசர் பிரான்சீஸ் ஆகும். “உலக அரசியல் சதுரங்க விளையாட்டுப் போலவே நடத்தப்படுகிறது. பலமானவர்கள் மற்றவர்களை வீழ்த்தி வெற்றிபெற என்ன செய்யவேண்டுமென்று கணித்துச் செயல்படுகிறார்கள்,” என்று சாடியிருக்கிறார் பாப்பரசர்.
சாள்ஸ் ஜெ. போமன்