வலதுசாரி பிரெஞ்ச் வேட்பாளர் மரின் லி பென்னால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா என்பது இரண்டாம் சுற்றில் தெரியவரும்.

அரிதாகவே பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலொன்றில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி வெல்வதுண்டு. கடினமான கொரோனாத்தொற்றுக்காலத்தை எதிர்கொண்ட மக்ரோன் தேர்தல் பிரச்சாரத்திலும் அசட்டையாக இருந்தும் மீண்டும் வெற்றிபெறுவாரா என்ற கேள்விக்குப் பலமான “ஆம்,” என்ற பதிலளித்திருக்கிறார் அவர். ஞாயிறன்று தேர்தல் முடிந்ததும் வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டைப் போலவே ஏறக்குறையச் சகல வாக்குகளும் எண்ணப்பட்டபின் மரின் லு பென் இரண்டாவது இடத்திலிருக்க மக்ரோன் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

பிரான்சில் நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் கால் பங்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதில்லை. – வெற்றிநடை (vetrinadai.com)

எந்த ஒரு வேட்பாளரும் முதலாவது சுற்றில் 50 விகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிராததால் மேலுமிரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் இரண்டாவது சுற்றில்தான் பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரியவரும். மக்ரோன் 27.35 % வாக்குகளையும், மரின் லு பென் 23.97 % வாக்குகளையும் பெற்றிருந்தார். 

எதிர்பார்த்தபடியே வாக்குச் சாவடியைப் புறக்கணித்தவர்கள் 25 % க்கும் அதிகமென்றே தெரிகிறது. மாலை 17.00 மணியளவில் வாக்களித்தோர் 65 % விகித வாக்காளர்களே. அதே சமயத்தில் 2017 தேர்தலில் சுமார் 69.5 % வாக்காளர்கள் தமது ஜனநாயகக் கடமையைச் செய்திருந்தார்கள். அதிகமான அளவில் வாக்காளர்கள் வாக்களிக்காத பட்சத்தில் தேர்தலின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகலாம் என்று மக்ரோனின் பகுதியில் சந்தேகமிருந்தது. மரின் லு பென், மெலஞ்சோன் ஆகியோருக்குப் பிரான்சின் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்கவேண்டும் என்ற அவசியம் இருந்தது.

“ஜனாதிபதிப் பதவிக்கான போட்டி இன்னும் முடிவு பெறவில்லை. வரவிருக்கும் நாட்களில் நாம் எதைப்பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பதே பிரான்சுக்கும், ஐரோப்பாவுக்கும் முக்கியமாக இருக்கும்,” என்று தேர்தல் முடிவுகள் தெரிந்தபின் நன்றி சொல்ல மேடைக்கு வந்த மக்ரோன் குறிப்பிட்டார்.

ஏறிவரும் வாழ்க்கைச் செலவுகளைப் பிரெஞ்ச் மக்கள் எதிர்கொள்ள அரசு என்ன உதவிகளைச் செய்யப்போகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரேயொரு அணு ஆயுத நாடான பிரான்ஸ் ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் அரசியலில் எந்த ஸ்தானத்தை வகிக்கப் போகிறது? போன்றவை வரும் நாட்களில் பிரெஞ்ச் அரசியல் மேடைகளில் பெரிதும் வாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது. 

எரிக் செம்ம்மூர் தவிர்ந்த இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் போகாத வேட்பாளர்கள் எல்லோரும் தமது ஆதரவாளர்களை விளித்து,”வலதுசாரித் தேசியவாதி லி பென்னை வீழ்த்துங்கள், மக்ரோனுக்கு ஆதரவளியுங்கள்,” என்று குறிப்பிட்டார்கள். மூன்றாவது இடத்தைப் பெற்ற இடதுசாரி வேட்பாளர் மெலன்சோன் அதையே சொன்னாலும் நேரடியாக மக்ரோனுக்கு வாக்களிக்கும்படி குறிப்பிடவில்லை.

லி பென் தனது நன்றி உரையின்போது இடதுசாரி வாக்காளர்களுக்கு விலாசமிட்டு, “பிரெஞ்ச் மக்களுக்கான முடிவுகளைப் பிரான்சின் எடுக்கவேண்டும், வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பேன், எரிபொருளுக்கான வரியைக் குறைப்பேன்,” போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களுக்கு வலைவீசியிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *