போர் ஆரம்பித்த பின்னர் புத்தினைச் சந்திக்கவிருக்கும் முதல் ஐரோப்பியத் தலைவர் ஆஸ்திரியப் பிரதமராகும்.
1955 முதல் அணிசாரா நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவ்வழியில் ரஷ்ய-உக்ரேன் போரையும் கணித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு ஆஸ்திரியா. உக்ரேனுக்கு ஆயுத உதவிகளெதுவும் செய்யாத ஐரோப்பிய நாடுகள் ஒரு சிலவற்றில் ஆஸ்திரியாவும் ஒன்றாகும்.
திங்களன்று ரஷ்யாவுக்குச் செல்லும் ஆஸ்திரியப் பிரதமர் கார்ல் நெஹம்மர் புத்தினை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறார்.கடந்த வார இறுதியில் உக்ரேனுக்குச் சென்று செலின்ஸ்கியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்திய நெஹம்மர் புச்யா நகரை ரஷ்ய இராணுவம் கைவிட்ட பின்னர் அங்கே நடந்திருந்த போர்க்குற்றங்களை நேரடியாகச் சென்று பார்த்தவருமாகும்.
“இராணுவ ரீதியாக நாம் அணிசேராதவர்கள். அதன் அர்த்தம் குற்றங்கள் நடக்கும்போது அதைப்பற்றி விசாரிக்கவோ, தண்டனை கொடுக்கவோ பின் நிற்பவர்கள் அல்ல. செலின்ஸ்கியுடன் பல விடயங்களைப் பேசியபின்னர் நான் புத்தினை நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்தேன். எனது எண்ணம் இரண்டு தரப்பாருக்கும் இடையே பாலமொன்றை ஏற்படுத்திப் போரை நிறுத்த ஒரு வழியை உண்டாக்குவதேயாகும்,” என்கிறார் நெஹம்மர்.
தான் புத்தினைச் சந்திக்கும் போது புச்யா நகரில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றியும் விவாதிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். போர்க்குற்றங்களைக்த் தண்டிப்பதில் சர்வதேச நீதி மிகவும் மந்த நிலையிலேயே செயற்பட்டாலும் அதைச் செய்ய முயற்சிப்பது அவசியம் என்று நெஹம்மர் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.
நெஹம்மர் இந்தச் சமயத்தில் நேரடியாகப் புத்தினைச் சந்திக்கச் செல்வது பற்றி உக்ரேன் அரசு தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்தும் உக்ரேன் மண்ணில் போர்க்குற்றங்களை இழைத்துவரும் ரஷ்யாவின் தலைவருடன் இந்தச் சமயத்தில் எதைப் பேசமுடியுமென்று தனக்குப் புரியவில்லை என்று ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் உக்ரேன் மரியபூல் நகர ஆளுனர் செர்கேய் ஒர்லோவ் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்