ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவரைப் பாப்பரசர் சந்திக்ககூடும்.
ஜூன் மாதத்தில் லெபனானுக்கு விஜயம் செய்யவிருக்கும் பாப்பரசர் பிரான்சீஸ் அங்கிருந்து ஜெருசலேமுக்கு ஒரு திடீர் விஜயம் செய்து ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரிலைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.அச்சந்திப்புச் சாத்தியமாகும் பட்சத்தில் ஜூன் 12, 13 லெபனானில் தனது விஜயத்தை முடித்துக்கொண்டுஜோர்டானில் அம்மானுக்குச் சென்று அங்கிருந்து 14 ம் திகதி ஜெருசலேம் சென்று திருச்சபைத் தலைவர் கிரிலை அவர் சந்தித்துப் பேசுவார்.
மேற்கு நாடுகளின் நடவடிக்கைகளால் சீரழிந்து வரும் பண்புகளுக்கு எதிராக நடக்கும் போரென்று உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்து வருபவர் கிரில். ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான அவர் போருக்கான ஆதரவு கொடுக்கும்படி ஞாயிறன்று மக்களை வேண்டி மொஸ்கோவில் ஊர்வலமும் நடத்தியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் மால்டாவுக்குச் சென்று திரும்பிவந்த 85 வயதான பாப்பரசர் தான் ரஷ்யத் po தலைவரைச் சந்திக்க விரும்புவதாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார். கத்தோலிக்க, ஓர்த்தடொக்ஸ் திருச்சபைகள் 1054 ம் ஆண்டு பிளவுபட்டுத் தனிப் பாதையில் போனபின் அதன் தலைவர்களிடையே இதுவரை ஒரேயொரு சந்திப்பே நடந்திருக்கிறது. 2016 ம் ஆண்டு கியூபாவில் அச்சந்திப்பு நடைபெற்றிருந்தது.
வத்திக்கானிலிருந்து இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படாத இந்தச் சந்திப்பு நிகழுமானால் அவ்விரு திருச்சபைகளுக்குமிடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பாக இது இருக்கும். கொரோனாக் காலகட்டம் முடிந்து வத்திக்கான் புனித பேதுரு ஆலயத்தில் நடந்த முதலாவது குருத்தோலை ஞாயிறு பூசையின்போது பாப்பரசர் வரவிருக்கும் பாஸ்கு திருநாளை ஒட்டி உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்திச் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்