அமெரிக்கா 2021 இல் கொடுத்த H-1B விசாக்களில் நாலில் மூன்றை இந்தியர்களே பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இயங்கும் நிறுவனங்களில் வேலைக்காக எடுக்கப்பட்டு அங்கேயே வாழவும், குடியேறவும் படிப்படியாக அனுமதி பெறக்கூடிய வழியை H-1B விசா கொடுக்கிறது. வருடாவருடம் உலகெங்குமிருந்து துறைசார்ந்த திறமைசாலிகளைத் தமது நிறுவனங்களில் வேலைக்கமர்த்த அவை அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுகின்றன. அதேபோல அமெரிக்காவுக்குக் குடியேற விரும்பும் வெளிநாட்டுத் திறமைசாலிகளுக்கும் அவ்விசா அமெரிக்காவின் கதவைத் திறக்கிறது.
கடந்த பல வருடங்களாகவே பெரும்பாலான H-1B விசாக்களைப் பெறுவதில் இந்தியர்கள் முதலிடத்தில் இருந்து வருகிறார்கள்.2020 இல் அவ்விசாக்களில் 75 % ஐ இந்தியர்களே பெற்றனர். 2021 இல் அது 74 % ஆகும். இரண்டாவது இடத்தில் சுமார் 12 % விசாக்களைப் பெற்றுவரும் சீனர்கள் இருக்கிறார்கள். அவர்களையடுத்து கனடா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலைக்கு 1 % க்கும் குறைவான விசாக்களைப் பெற்று வருகிறார்கள்.
துறைசார்ந்த திறமைசாலிகள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும்போது அங்கிருந்தும், அல்லது குறிப்பிட்ட நாடுகளிலிருந்து நேரடியாகவும் அமெரிக்க நிறுவனங்களால் ஊழியங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டு அமர்த்தப்படுகிறார்கள். மைக்ரோசொப்ட், பேஸ்புக், அமெஸான், கூகுள் போன்றவைகள் அவ்விசாக்களைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன.
H-1B விசா பெற்றவர்கள் முதலில் மூன்று வருடங்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்து வாழ உரிமை பெறுகின்றனர். அது மேலும் மூன்று வருடங்களுக்கு அங்கே புதுப்பிக்கப்படலாம். அத்துடன் அவர்கள் அங்கேயே தமது குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளவும் அது உதவுகிறது. பெரும்பாலானவர்கள் அதையே செய்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்