பிரான்ஸ் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் – இரண்டு வெவ்வேறு தெளிவான வழிகளில் போக விரும்புகிறார்கள்.
சுமார் 49 மில்லியன் பிரெஞ்ச் வாக்காளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுதியாக நாட்டுக்கான அடுத்த ஜனாதிபதி யாரென்று தெரிவு செய்யவிருக்கிறார்கள். சர்வதேச அளவிலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் முன்னர் இரண்டு நேரெதிர் வழிகள் நாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன எனலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலும் நெருங்கிக் கலந்து அதன் மூலம் பிரான்ஸ் சர்வதேச அரசியல் மைதானத்தில் முக்கிய இழுப்புச்சக்தியாகத் திகழவேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஜனாதியாக இருக்கும் இம்மானுவேல் மக்ரோன். உள்நாட்டைப் பொறுத்தவரை தொடர்ந்தும் கலப்புப் பொருளாதாரம், வேலைவாய்ப்புகளை அதிகரித்து மக்களைச் சுய சம்பாத்தியத்தில் வாழக்கூடியதாக அரசியல் செய்யவிரும்புகிறார்.
எதிர்ப்பக்கம் நிற்கும் மரின் லி பென் பிரான்ஸ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளுக்காகத் தனது தேசியப் பெருமைகளை இழக்கலாகாது. பிரான்ஸ் சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்குத் தலைவணங்கலாகாது என்கிறார். குடியேறிய வெளிநாட்டவருக்குப் பிரெஞ்சுக்காரர்கள் பெறுவதை விடக் குறைவான உரிமைகளும், பொருளாதார வாய்ப்புக்களும் கொடுக்கப்படவேண்டும் என்கிறார் லி பென். தேசியவாதம், இனவாதம், பிரான்ஸ் முதல் மற்றவர்கள் அதற்குப் பின்னால் என்பதே அவரது கோஷமாக இருந்து வருகிறது. இஸ்லாம், முஸ்லீம்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளையும் அவர் கொண்டுவர விரும்புகிறார்.
யாருக்கு வாக்களிப்பது என்பதில், ஏறிவரும் விலைகளை எதிர்கொள்ளப் பொருளாதார பலம், பாதுகாப்பு, மக்கள் ஆரோக்கியம் ஆகியவை வாக்காளரிடையே முக்கிய இடங்களை வகிக்கிறது. இளம் வாக்காளர்கள் சுற்றுப்புற சூழல் பேணுதல், காலநிலை மாற்றங்களுக்குத் தடை போடும் நடவடிக்கைகளை முக்கியமானவைகளாகக் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு முன்னைய வாரக் கருத்துக் கணிப்புகளில் மக்ரோன் சுமார் 10 % ஆதரவால் முன்னணியில் இருக்கிறார். ஆயினும், முதல் சுற்றுத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பெற்ற லுக் மெலன்சோன் ஆதரவாளர்கள் தமது வாக்குகளைப் போடாமல் தவிர்த்தால் என்னாகும் என்பது இரண்டு வேட்பாளர்களின் வெற்றிச் சந்தர்ப்பத்தைப் பற்றிக் கேள்வியெழுப்புகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்