சமையலுக்கான எண்ணெய் விலை எகிறும்போது இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி தடை!
ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக உலகில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலையேற்றம் உண்டாகியிருக்கிறது. தமது பணப்பைகளில் அதன் தாக்கத்தை மக்கள் உணர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் தமது நாட்டில் உற்பத்தியாகும் சமையலுக்கான எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ததாக இந்தோனேசியா அறிவித்திருக்கிறது. சமையலுக்கான எண்ணெய் வகைகளை ஏற்றுமதி செய்வதில் உலகில் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடு இந்தோனேசியா ஆகும். தயாரிப்பைப் பொறுத்தவரை இந்தோனேசியா முதலிடத்திலிருக்கிறது.
சமையலுக்கான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், தாவர எண்ணெய் ஆகியவைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமானவையான ரஷ்யாவும், உக்ரேனும் போரில் ஈடுபட்டிருப்பதாலும், ரஷ்யா மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளாலும் அவர்களுடைய தயாரிப்புக்கள் உலக நாடுகளுக்கு எட்டுவது குதிரைக்கொம்பாகியிருக்கிறது. இச்சமயத்தில் இந்தோனேசிய அரசு எடுத்திருக்கும் சமையல் எண்ணெய் ஏற்றுமதித் தடை அதன் மொத்தக் கொள்வனவு விலையைத் திங்களன்று 6 % ஆல் உலகச் சந்தையில் உயரவைத்திருக்கிறது.
இந்தோனேசியாவின் அந்த முடிவானது சர்வதேச ரீதியில் பாதிப்பைக் கொடுத்திருக்கின்றன. அங்கிருந்து சமையல் எண்ணெய் வகைகளைக் கொள்வனவு செய்வதில் முதலிடத்திலிருக்கும் நாடுகளான இந்தியா, சீனா ஆகியவைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன.
வாகனங்களுக்கான மாற்று எரிபொருட்களுக்காக விளையும் நிலத்தில் அத்தகைய தானியங்களைத் தயாரித்து வருவதும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவற்றால் மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வாகன எரிபொருளின் விலை அதிகமாக இருப்பதால் உணவு விளைவிக்கும் நிலத்தை அதற்கான தானியங்களுக்குப் பாவித்தல் அதிகமாகாமல் தடுப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற குரலும் அதிகமாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்