ரஷ்ய – உக்ரேன் போர் சர்வதேச அளவில் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தியிருக்கிறது.
உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை பெரும் உயர்வைக் கண்டிருக்கிறது. முக்கியமாக, தானியங்கள், சமையல் எண்ணெய், சர்க்கரையின் சமீபகாலவிலையுயர்வு என்றுமே உலகம் கண்டிராதது. ஐ.நா-வின் உணவு, விவசாய அபிவிருத்தி அமைப்பு (FAO) உணவுப்பொருட்கள் விலையேற்றம் பற்றித் தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது
ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பே அந்தச் சடுதியான விலையேற்றங்களுக்குக் காரணம். உலகின் பல நாடுகளுக்கு அத்தியாவசிய அடிப்படை உணவுப்பொருட்களை விளைவித்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் உக்ரேனும், ரஷ்யாவும் ஆகும். போரின் விளைவுகளால் விரைவில் அடிப்படை உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற கிலி சர்வதேச மொத்த உணவுச் சந்தையில் ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆபிரிக்காவிலும் அப்பயம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
FAO அமைப்பு சர்வதேசச் சந்தையில் உணவுப்பொருட்களின் விலைகளின் மாற்றங்களைக் கண்காணித்து விலையுயர்வுகளைத் தரப்படுத்தியும் வருகிறது. கோதுமை மா, சமையல் எண்ணெய் ஆகியவைகளைப் பொறுத்தவரை பெப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை விலையேற்றம் 12.6 % ஆகும். இதன் முக்கிய காரணம் ரஷ்ய – உக்ரேன் போரே என்கிறது ஐ.நா. ஏற்கனவே பெப்ரவரியில் உணவுப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.
அமெரிக்காவின் கோதுமை விவசாயத்தில் காலநிலை மாற்றங்களால் தடங்கல்கள் ஏற்பட்ட நிலையில் சர்வதேச கோதுமை விலை 19.7 % பெப்ரவரியில் உயர்ந்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்