பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு எல்லையின்றிப் படு வேகமாக அதிகரிக்கிறது.
பிளாஸ்டிக் குப்பைகளை மீள்பாவனைக்கு உட்படுத்தல் ஒரு பக்கத்தில் உலகெங்கும் அதிகரித்து வரும் அதே சமயம் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது. வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு (OECD) வெளியிட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி 2060 இல் உலகெங்கும் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு இன்றிருப்பதை விட மூன்று மடங்காகியிருக்கும்.
பிளாஸ்டிக் பொருட்களைப் பாவிக்கும் அளவு ஆசியாவிலும், ஆபிரிக்காவில் சகாராவுக்குத் தெற்குப் பாகங்களிலும் வேகமாக அதிகரித்து வருவதே இதற்கான முக்கிய காரணம். பிளாஸ்டிக் பொருட்களை மீள்பாவனை செய்தலின் அளவு இரட்டிப்பாகி வருகிறது. ஆயினும், 2060 அளவில் மொத்தமாக மீள்பாவனைக்கு உள்ளாகும் பிளாஸ்டிக்கின் அளவு 12 % ஐயே எட்டும் என்கிறது அந்த அறிக்கை.
பாவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஆகும் குப்பையை மீள்பாவனை செய்தலிலிருக்கும் ஒழுங்கின்மையும், சட்டக் குறைபாடுகளுமே இந்த நிலைமைக்குக் காரணம். எனவே குப்பைகளை ஒழுங்காகச் சேர்த்தல், ஒன்றுபடுத்தலுக்கான ஒழுங்குகள் சீர்செய்யப்படலும், பிளாஸ்டிக் பாவித்தலின் மீது வரிகளைப் போடுதலுமே இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்கிறது அறிக்கை.
சாள்ஸ் ஜெ. போமன்