தியாக உணர்வுடன் ஓர் ஏழை|மலையகப் பெண்ணின் வலி| விபரித்தது காத்தாயி காதை!
கடந்த 11 ஜூன் 2022 அன்று, EastHam இல் நடைபெற்ற “மலையக இலக்கிய மகாநாட்டில், மிக..மிகப் பொருத்தமாய் மகாநாட்டையே மெருகேற்றிய சிறப்பு அரங்கு அது.
“மெய்வெளி” நாடகக் குழுமத்தினரால், சாம்பிரதீபனின் மெச்சத்தகு எழுத்துருவோடும் நெறியாழ்கையோடும் கச்சிதமாக மேடை ஏற்றப்பட்டது “காத்தாயி காதை” எனும் நாடகம்.
எவரும் அறியா விகல்ப்பமில்லா , தியாக உளங்கொண்ட ஓர் ஏழை மலையகப் பெண்ணின் வலி கொண்ட வாதையைக் காதையாக விபரித்து… பலரும் அறிய வைத்தார் சாம்பிரதீபன்.அவரின் கம்பீரக் குரலோடு ஆரம்பமாகியது மேடை அரங்கு. ஆரம்பமே அசத்தல். சாமின் கர்ஜனை, ஒரு கணம் அரங்கையே விதிர் விதிர்க்க வைத்தது. உண்மையில் நான் அரண்டே விட்டேன்.
காத்தாயியாக , உருக, உருகத் தன் நடிப்பாற்றலைப் பிழிந்து , அந்த அபலைப் பெண்ணின் ஈனக் குரலையும் கதறலையும் எத்துணை அற்புதமாய் சுவீகரித்துப் பிரதிபலித்தார் றஜித்தா சாம் அவர்கள். அடடா..அதி அற்புதம். மெய்சிலிர்த்துக் கண் பனித்தனர் சபையோர்.
போராளியக வந்தவரின் தீரமான நடிப்பும்., கருங்காலிகள் எனும் அரச படகளாக உருமாறிய அச்சின்ன விடலைகளின் திடமும், கம்பீரமும் சொல்லில் அடங்கா. மேலாக , ஓலி அமைப்பை திறம்பட இயக்கிய சிறுமிகள் சிறப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பெருச்சாளிகளாய், காட்டிக் கொடுக்க அலையும் தீவட்டிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அநியாயமாக, மானுடம் மறந்த , மறுத்த ஆதிக்கக் காட்டுமிரண்டி வெறியர்களால் பொசுக்கப்பட்ட பேதையின் வாழ்வையும் , கொடுமையான மரணத்தையும் சொற்ப நேரத்தில் அபாரமாய் கச்சிதமாய் சித்தரிக்க “சாம்பிரதீபனால்” மட்டுமே முடிந்தது…முடியும். எண்ணில் அடங்காப் பாராட்டு வாழ்த்துகளோடு என் ஆரத்தழுவிய ஆராதனைகள் “ மெய்வெளி” குழுமத்தினருக்கு.
எழுதுவது : நவரட்ணராணி, லண்டன்