அரசியல்செய்திகள்

உக்ரேன் – ரஷ்யா – துருக்கி – ஐ.நா தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.

சர்வதேச உணவுத்தட்டுப்பாடு, விலையுயர்வுகளை எதிர்கொள்ளவும், வறிய நாடுகளை மேலும் வாட்டாமல் இருக்கவும் உக்ரேன் தனது தானியங்களைக் கருங்கடல் துறைமுகப்பாதை மூலம் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா சம்மதித்திருந்தது. இடைவழியில் கால தாமதம் ஏற்பட்டு வந்தாலும் உக்ரேன் சுமார் 10 மில்லியன் தொன் தானியத்தை ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த வார இறுதியில் ரஷ்யா அந்தச் சம்மதத்தை வாபஸ் பெற்று கருங்கடல் கப்பல் வழி பாதுகாப்பற்றது என்று தெரிவித்திருந்தது.

ரஷ்யாவின் அந்த நகர்வு சர்வதேச ரீதியில் பெரும் எதிர்ப்புப் புயலை எதிர்கொண்டது. கண்டனங்கள், வேண்டுதல்கள் போன்ற வழிகளால் பல கோணங்களிலிருந்தும் ரஷ்யத்தலைமை அணுகப்பட்டது. சர்வதேச அளவில் தனது கௌரவத் திட்டமாக அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திப் பாராட்டுகளைப் பெற்ற துருக்கியத் தலைவர் எர்டகான் உடனடியாக ரஷ்யா செய்தது தவறு என்று குறிப்பிட்டார். ரஷ்யத் தலைமையையும் நேரடியாக அணுகி அந்த ஒப்பந்தத்துக்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கத் தன்னாலானதைச் செய்தார்.

புதனன்று எர்டகான் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி ரஷ்யாவின் தலைமை குறிப்பிட்ட தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்துக்கு மீண்டும் ஒத்துழைப்புத் தருவதாக ஒத்துக்கொண்டிருக்கிறது.

“நான் நேற்று ஜனாதிபதி புத்தினுடன் தொடர்புகொண்டு உரையாடினேன். அதையடுத்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு அவர்கள் எங்கள் பாதுகாப்பு அமைச்சர்  ஹுலுசி அக்காருடன் பேசினார். உக்ரேன் தனக்கு ஏற்றுமதிக்காகக் கிடைத்திருக்கும் கருங்கடல் வழியை இராணுவத் தாக்குதல்களுக்காகப் பாவிக்காது என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்தத்துக்கு மீண்டும் திரும்புவதாக அவர் தெரிவித்தார்,” என்று எர்டகான் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *