பிரேசில் தேர்தல் முடிவை கேள்விக்குறியாக்கிய ஜனாதிபதிக்குத் தண்டம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
“கேலிக்குரியது, சட்டவிரோதமானது நாட்டின் ஜனநாயகத்துக்குக் குந்தகம் விளைவிக்க முற்படுகிறவர்களுக்குத் தீனிகொடுக்கிறது,” போன்ற கடுமையான விமர்சனங்களுடன் பிரேசிலின் பதவிவிலகும் ஜனாதிபதியின் கூற்றை நாட்டின் தேர்தல் ஆணையத் தலைவர் கண்டித்திருக்கிறார். சமீபத்தில் பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போன தற்போதைய ஜனாதிபதி ஜைர் பொல்சனாரோ வாக்களிக்கும் இயந்திரங்கள் “நம்பிக்கைக்கு உரியவையல்ல” என்று குறிப்பிட்டதற்கே தேர்தல் ஆணையத் தலைவர் அலெக்சாந்திரே டி மொரெஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பொல்சனாரோ தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமலேயே, தேர்தல் ஆணையத்தால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட எதிர் வேட்பாளர் லூலா டா சில்வாவிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் பொல்சனாரோவின் சக அமைச்சர்கள், ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பொறுப்புக்களை ஒப்படைத்தல் நடந்துகொண்டிருக்கிறது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் பாவிக்கப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் சிலவற்றில் அடையாள எண்கள் இல்லாமல் போயிருந்தன என்று குறிப்பிட்டுத் தேர்தல் செல்லுபடியாகாது என்று பொல்சனாரோ குறிப்பிட்டிருந்தார். அவரது ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் நாட்டின் இராணுவம் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றவேண்டும் என்றும், பொல்சனாரோ தோற்றதை ஏற்றுக்கொள்ளலாகாது என்றும் குறிப்பிட்டுப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தனது குற்றச்சாட்டு பற்றிய ஆதாரங்கள் ஏதுமின்றிப் பேசும் பொல்சனாரோ மீது தேர்தல் ஆணையத் தலைமை நீதியரசர் கடும் கோபமடைந்திருக்கிறார். கண்டனம் தெரிவித்ததுமன்றி பொல்சனாரோவின் அரசியல் கட்சி தேர்தல் அமைப்பின் மீது அவநம்பிக்கயூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகச் சுமார் 4.1 மில்லியன் டொலர்கள் தண்டம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்