எமிராத்திகளுக்குத் தனியார் நிறுவன வேலைகள் கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது.
பணக்கார வளைகுடா நாடுகளின் சொந்தக் குடிமக்கள் பெரும்பாலும் வேலை செய்யுமிடம் அந்த நாடுகளின் பொதுத்துறையிலும் அதன் நிறுவனங்களிலும் மட்டுமே என்ற நிலைமையை மாற்றுவதில் அந்த நாடுகள் வேகமாகச் செயற்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான எமிரேட்ஸில் ஜனவரி ஆரம்பம் முதல், 50 பேருக்கும் அதிகமானோரை வேலைக்கு வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் தமது திறமையான வேலைகளில் 2 % ஐ எமிராத்திகளுக்குக் கொடுத்திருக்கவேண்டும். இல்லையேல் அந்த நிறுவனங்கள் மீது அரசு தண்டம் விதிக்கும்.
எமிரேட்ஸில் வாழும் 9 மில்லியன் மக்களில் 12 விகிதமானோரே அந்த நாட்டுக் குடிகளாகும். அவர்களின் கல்வித்தகைமையை உயர்த்துவதற்காக அரசு நீண்ட காலம், பெருமளவில் செலவிட்டிருக்கிறது. தகைமையுள்ளவர்களுக்கு உயர்ந்த ஊதியத்துடன் வேலைகளைப் பொதுத்துறைகளிலேயே அரசு கொடுத்து வந்தது. அந்த நிலைமை மாறித் தகைமையுள்ளவர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி இருக்கும் காலம் உருவாகியிருக்கிறது. அவர்களுடைய தகைமைக்கேற்ற வேலைவாய்ப்புக்களைத் தனியார் நிறுவனங்கள் கொடுக்கவேண்டுமென்பதே அரசின் திட்டமாகும்.
2026 இல் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் 10 % பேர் எமிராத்திகளாக இருக்கவேண்டும் என்ற தனது திட்டத்தில் அரசு தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறைந்த ஊதியத்தில் வெளிநாடுகளிலிருந்து தகைமையான வேலைகளுக்கு ஆட்களைக் கொண்டுவந்த தனியார் நிறுவனங்களுக்கு இது ஒரு சவாலாக ஆகியிருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் தமது தகைமையான வேலைகளுக்கு எமிராத்திகளை எடுக்க வசதியில்லாத பட்சத்தில் அரசு மான்யம் கொடுத்து வருகிறது. தனியார் நிறுவனத்தில் 30,000 டிர்ஹாமை விடக் குறைவான ஊதியம் பெறும் எமிராத்திகளுக்கு மாதம் 7,000 டிர்ஹாம் மான்யமாக அரசால் கொடுக்கப்படுகிறது. 2022 இல் தனியார் நிறுவனங்கள் 14,000 எமிராத்திகளைப் புதியதாக வேலைகளுக்கு அமர்த்தியிருப்பதாக நாட்டின் வேலைவாய்ப்பு அமைச்சர் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்