“வெளிநாட்டினரின் உறவுகளைப் பற்றி நாம் ஆராயமாட்டோம்” உறுதிகூறும் பாலியின் ஆளுனர்.
“திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு வைத்துக்கொள்ளலாகாது, சேர்ந்து வாழலாகாது,” என்ற இந்தோனேசியச் சட்டம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி நிறுத்திவிடுமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப் பிரபலமான சுற்றுலாப் பிராந்தியமான பாலியின் ஆளுனர் வயான் கோஸ்டர் அது பற்றி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். “எங்கள் விருந்தினர்களாக வரும் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரின் அந்தரங்க உரிமைகள், சுகம் ஆகியவற்றை நாம் பெரிதும் மதிக்கிறோம். எனவே நாட்டின் புதிய சட்டத் திருத்தங்கள் பற்றிச் சஞ்சலப்படாதீர்கள்,” என்று அவர் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
சுமார் மூன்று வருடங்களில் இந்தோனேசியாவெங்கும் அமுல்படுத்தப்படவிருக்கும் சட்டத் திருத்தமானது, திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு வைத்துக்கொள்ளலாகாது, சேர்ந்து வாழலாகாது என்கிறது.. நாட்டின் குடிமக்கள் மட்டுமன்றி நாட்டுக்கு விஜயம் செய்கிறவர்களும் அதைக் கடைப்பிடிக்கவேண்டும். மீறுகிறவர்கள் ஒரு வருடம் வரைச் சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்கள், என்றும் அந்த ஒழுக்க விதி குறிப்பிடுகிறது.
பெற்றோர் அல்லது கணவன்\மனைவி குற்றஞ்சாட்டினாலே குறிப்பிட்ட ஒழுக்கம் பற்றிய விசாரணை நடத்தப்படும். சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களில் பதியும்போது அவர்களின் உறவுமுறைகள் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள் என்கிறார் ஆளுனர் கோஸ்டர்.
கொவிட் 19 ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது பாலியின் சுற்றுலாத்துறை. பெருமளவில் இந்துக்களைக் கொண்ட பாலிக்குப் பெருமளவில் வர்த்தகத்துக்கு உதவும் சுற்றுலாத்துறை பாதிக்கப்படலாகாது என்று அதன் அரசு அஞ்சுகிறது. குறிப்பிட்ட சட்டத்திருத்தம் பற்றிய செய்தி வெளியாகியதும் அங்கே விஜயம் செய்யத் திட்டமிட்டவர்கள் பலர் தமது பிரயாணத்தை நிறுத்தியதாகவும், ஹோட்டல் அறைகளில் போட்ட திட்டங்களை ரத்துச் செய்துவிட்டதாகவும் பரவிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் ஆளுனர். அடுத்த வருடம் பாலிக்கு விஜயம் செய்யவிருக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்