தடுப்பூசிக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய தாய்லாந்து, திடீரென்று அவற்றை வாபஸ் பெற்றது.
சீனாவில் கொவிட் 19 ஆல் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் விடயமானது, பயணங்களில் எந்தெந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது என்பது பற்றி உலக நாடுகளிடையே தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா பாகத்திலிருந்து சீனாவிலிருந்து வருகிறவர்கள் மீது கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதையடுத்து தாய்லாந்து தனது நாட்டுக்குள் வருகிறவர்கள் தடுப்பூசி போட்டிருப்பது அவசியம் என்ற கட்டுப்பாட்டை ஜனவரி 09 ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்போவதாகச் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. திடீரென்று தனது நிலைப்பாட்டிலிருந்து மாறிய தாய்லாந்து அறிவித்திருந்த நடவடிக்கைகளிலிருந்து முழுவதுமாகப் பின்வாங்கியிருக்கிறது.
தாய்லாந்தின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அனுதின் சான்விருகுல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தாய்லாந்து எவ்வித கொவிட் 19 கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. சர்வதேச அளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் பலமான பாதுகாப்பை வழங்கிவருகிறது. எனவே தாய்லாந்து எவ்வித கட்டுப்பாடுகளையும் போடுவது அவசியமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
தனது நாட்டில் பெருமளவில் கொவிட் 19 பரவியிருப்பினும் சீனா ஞாயிறன்று முதல் தனது நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு இருந்த கொரோனாக்கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டதாக அறிவித்தது. மூன்று வருடங்களாகச் சீனா தனது எல்லைகளில் நடைமுறைப்படுத்திவந்த கொவிட் கட்டுப்பாடுகள் ஞாயிறன்று நீக்கப்பட்டிருக்கின்றன. எவரும் சீனாவுக்குள் மீண்டும் வரலாம், வெளியேறலாம் என்ற நிலையில் தாம் கொண்டுவரும் கட்டுப்பாடுகள் தமது முக்கிய சுற்றுலாப் பயணிகளான சீனர்களைப் பாதிக்கும் என்ற நிலையிலேயே தாய்லாந்து தனது கட்டுப்பாடுகளிலிருந்து பின்வாங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்